நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், அரச குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதுடன், மாநிலத்தின் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான முடிவுகளுக்குக் கட்டுப்படுவதாக அளித்துள்ள உறுதிமொழியை பக்காத்தான் ஹராப்பான் வரவேற்றுள்ளது.
அவரது நிலைப்பாடு, மாநிலத்தில் அரசியல் நெருக்கடி தொடங்கியதிலிருந்து பக்காத்தான் கடைப்பிடித்து வரும் கொள்கைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதாக மாநிலத் தலைமை மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது, பாரம்பரிய விவகாரங்களில் தலையிட்டதாகவும், அரண்மனையின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தியதாகவும், இஸ்லாத்தின் நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் பக்காத்தான் மீது பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் குற்றம்சாட்டியிருந்தன.
எனவே, ஆதாரமற்ற இந்தக் குற்றச்சாட்டுகளை பாரிசான் மற்றும் பெரிக்காத்தான் தலைமைத்துவங்கள் திரும்பப் பெற வேண்டும் என பக்காத்தான் வலியுறுத்தியுள்ளது.
மேலும் அக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவற்றைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், இல்லையெனில் அவற்றைத் திரும்பப் பெற்று திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.








