நெகிரி செம்பிலான் மாநில அரசியல் சர்ச்சைக்கு மத்தியில், மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் உத்தரவிட்டுள்ளார்.
மாநில நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், தமது கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு ஆட்சியாளர் பணித்துள்ளதாக இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் முழு அர்ப்பணிப்புடன் பொறுப்புகளை நிறைவேற்றப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த நவம்பர் 16ஆம் தேதியிட்டதாகக் கூறப்படும் பதவி விலகல் கடிதத்தைத் தாம் சமர்ப்பிக்கவில்லை என்றும், அதனைச் சமர்ப்பிக்க அனுமதிக்கவும் இல்லை என்றும் இஸ்மாயில் திட்டவட்டமாகக் கூறினார்.
இன்று சிரம்பானில் உள்ள இஸ்தானா ஹிங்காப் அரண்மனையில் மாநில ஆட்சியாளரைச் சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை இஸ்மாயில் பதவி விலகியதாகச் செய்திகள் வெளியான நிலையில், இஸ்மாயில் தாமாகவே பதவி விலக முடிவெடுத்ததாகக் செவ்வாய்க்கிழமை அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி கூறியிருந்தார்.
இதற்கிடையில், பதவி விலகல் கடிதத்தின் உண்மைத்தன்மையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என நெகிரி செம்பிலான் அரண்மனை தெரிவித்திருந்தது.
மாநில அரசியலமைப்பின்படி, மந்திரி பெசாரின் பதவி விலகல் மாநில ஆட்சியாளரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.








