நெகிரி செம்பிலான் மாநில அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், தமது பதவி குறித்து நாளை வெள்ளிக்கிழமை முக்கியத் தகவல் வெளியாகலாம் என மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாகப் பொதுவெளியில் கருத்து தெரிவிக்காமல் இருந்த அவர், நாளை மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸைச் சந்திக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் முட்டுக்கட்டை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நாளை தம்மைச் சந்திக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகுவதாக இஸ்மாயில் தெரிவித்திருந்ததாகச் செய்திகள் வெளியாகின.
எனினும், அவரது பதவி விலகல் மாநில அரசியலமைப்பின்படி ஆட்சியாளரின் ஒப்புதல் கிடைத்த பின்னரே நடைமுறைக்கு வரும் என அரண்மனை செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.
இஸ்மாயில் லாசிம், நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸை நாளை சந்திக்கவுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.








