நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமின் பதவி விலகல் விவகாரத்தில், மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை அம்னோ ஏமாற்ற முயன்றதா என ஜசெக தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இஸ்மாயில் லாசிம், தாம் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்கவில்லை என்றும், அதனை அனுப்புவதற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிவித்திருப்பதை ஜசெக உதவித் தலைவரான ஷாரெட்ஸான் ஜொஹான் சுட்டிக் காட்டினார்.
இதன் மூலம், ஜுவாசே சட்டமன்ற உறுப்பினரான இஸ்மாயில், உண்மையில் பதவி விலகவில்லை என்பது தெளிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், பதவி விலகல் விவகாரம் சர்ச்சைக்குரியதாக இருந்தபோதே, புதிய மந்திரி பெசார் வேட்பாளரின் பெயரை அம்னோ மாநில ஆட்சியாளரிடம் சமர்ப்பித்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் அம்னோ விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஷாரெட்ஸான் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த நவம்பர் 16ஆம் தேதி, இஸ்மாயிலின் பதவி விலகல் கடிதத்தின் நகல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகியதாக பாரிசான் நேஷனல் பொதுச் செயலாளர் ஸம்ரி அப்துல் காடீர் அறிவித்திருந்தார்.








