பேரா மாநில அரசாங்கத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்ற தகவலை மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முஹமட் மறுத்துள்ளார்.
பேரா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு இருப்பதால், முன்கூட்டியே கலைக்க வேண்டிய அவசரத் தேவை ஏதுமில்லை என அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத்தைக் கலைப்பது சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், ஆளும் ஒற்றுமை அரசாங்கத்தின் பெரும்பான்மை ஆதரவு இழக்கப்படுவது போன்ற வலுவான காரணங்கள் இருந்தால் மட்டுமே கலைப்பு கோரப்படும் என்றும் அவர் விளக்கினார்.
மேலும், அண்மைய மாநிலத் தேர்தல்களில் அம்னோ பெற்ற வெற்றிகள் மட்டும் முன்கூட்டிய தேர்தலுக்கு அடிப்படையாக அமையாது என்றும் சரானி குறிப்பிட்டார்.
பேரா மாநிலத்தில் பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையிலான ஒத்துழைப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மாநில நிர்வாகம் வழக்கம்போல் சுமுகமாகச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.








