கோலாலம்பூர், ஆகஸ்ட்.15-
ஐந்து ஆண்டு தவணைக் காலம் முடியும் வரையில் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்ற விரும்புவதாக அதன் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டு தவணைக் காலம் முடிந்தப் பின்னர் பிகேஆர் சார்பில் யார் வேண்டுமானாலும் அம்பாங் தொகுதியில் போட்டியிடுவதற்கு வழி விடத் தாம் தயாராக இருப்பதாக ரோட்ஸியா குறிப்பிட்டார்.
அம்னோவிலிருந்து விலகி பிகேஆர் அம்பாங் தொகுதியில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்துள்ள முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸின் வருகை, அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறலாம் என்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
தெங்கு ஸாஃப்ருலின் செனட்டர் பதவிக் காலம் முடிவுறும் நிலையில் அவர் அமைச்சர் பதவியை இழக்கும் அபாயத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து அமைச்சராக இருக்க வேண்டுமானால், இடைத் தேர்தல் வழி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.
தெங்கு ஸாஃப்ருல், திடீரென்று அம்பாங் தொகுதியில் சேர்ந்து இருப்பது, தனது எம்.பி. பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ரோட்ஸியா கருதுகிறார்.