கோலாலம்பூர், ஜூன்.14-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அரசியல் நிலையற்றத் தன்மை உருவாகக் காரணம் அதற்குப் பின்னால் நடந்த துரோகமே என பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் கருத்துரைத்த பாரிசான் நேஷனல் கூட்டணித் தலைவரும், துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி, ?அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என மறுத்திருந்தாலும் கூட, அன்வார் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக இன்று Koprojaya-வின் 10வது ஆண்டு பொதுக் கூட்ட நிகழ்வில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹாருன் தலைமையிலான நிலையான ஆட்சியைச் சீர்குலைக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளையில், இந்நாட்டில் பக்காத்தான் – பாரிசான் இடையிலான ஒத்துழைப்பு வெற்றிகரமாக அமைய வேண்டுமெனில், எந்தவிதத் துரோகச் செயல்களும் இடம் பெறக்கூடாது என்று தாம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நேற்று ஸாஹிட் ஹாமிடி வெளியிட்டிருந்த தகவலில், தொடக்கத்தில் பாரிசானின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் மந்திரி பெசார் அமிருடின் ஹாருனுக்கான ஆதரவை திரும்பப் பெற்றிருந்த போதிலும், மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மையையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு மீண்டும் அவருக்கு ஆதரவு வழங்க அம்னோ உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றமானது கடந்த ஜூன் 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டதையடுத்து, 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








