Sep 24, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா ஒத்திவைப்பு
அரசியல்

ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா ஒத்திவைப்பு

Share:

ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இன்று இஸ்தானா புகித் செரீன் அரண்மனையில் நடைபெறவிருந்த நிலையில், அது நாளை ஜூலை 18-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று காலை ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பில், ஒத்திவைப்புக்கான காரணம் குறித்து விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை.

இவ்விழாவானது முதலில் ஜோகூர் பட்டத்து இளவரசரும், இடைக்கால சுல்தானுமாகிய துங்கு மஹ்கோதா இஸ்மாயில் முன்னிலையில் இன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும், விழாவில் ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி, ஜோகூர் அரச மன்றத் தலைவர் ரஹிம் ரம்லி, மாநில தலைமைச் செயலாளர் முகம்மது ரிதா அப்துல் காதிர் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மச்சாப் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஒன் ஹபீஸ் காசி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது முறையாக ஜோகூர் மந்திரி பெசாராக பதவியேற்றார்.

ஜோகூர் மாநிலத்தின் 16வது சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் மீண்டும் அப்பொறுப்பை ஏற்றார்.

கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில், மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 48 இடங்களை கைப்பற்றி பாரிசான் நேஷனல் அமோக வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related News