கூட்டணி அரசியலில் பங்கேற்காமல் ஜசெக கட்சியால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்று அதன் பொதுச்செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அதிகார நிலையில் இருக்க வேண்டுமெனில் கூட்டணி அரசியலே அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், தனித்து போட்டியிடுவது எளிதானதாக இருந்தாலும், எதிர்க்கட்சி என்ற நிலையை மட்டுமே அடைய முடியும் என்றும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் வளர்ச்சியிலும் ஆட்சி நிர்வாகத்திலும் பங்கெடுக்க வேண்டுமெனில் கூட்டணி அரசியலே சரியான பாதை என தாம் நம்புவதாகவும் அவர் விவரித்துள்ளார்.
இதனிடையே, தற்போதைய ஆட்சிக்காலம் முடியும் வரை ஜசெக ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்கும் என்பதையும் அந்தோணி லோக் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பாரிசானை எதிர்கொண்டு தேர்தலில் போட்டியிடுவது கூட்டணி உறவில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட, நடப்பு அரசாங்கத்தை நிலைநிறுத்த அனைவரும் தொழில்முறை அணுகுமுறையுடன் செயல்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், அடுத்த பொதுத் தேர்தலில் ஒற்றுமைக் கூட்டணியாகவோ? அல்லது தனித்தனி கட்சிகளாகவோ போட்டியிடுவது என்பது நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு முடிவு செய்யப்படும் என்றும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.








