Jul 17, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனல் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனல் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

Share:

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பெர்சாத்து கட்சியைத் தவிர மற்ற கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பாஸ் 5 தொகுதிகளிலும், வாவாசான் கட்சி 4 தொகுதிகளிலும், கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

செர்திங், லோபாக், சிகாமாட், அம்பாங்கான், புக்கிட் கெப்பாயாங், மாம்பாவ், பாரோய், லூக்கோட், பாகான் பினாங் மற்றும் கெமாஸ் ஆகிய 11 தொகுதிகளில் பெரிக்காத்தான் கூட்டணியானது களமிறங்குகிறது.

இது குறித்து அம்பாங்கான் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பெரிக்காத்தான் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சம்சூரி மொக்தார், நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தில் இடம்பிடிக்கும் இலக்குடன் இந்தத் தேர்தலை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் கட்சி சார்பில், லூக்கோட் தொகுதியில், சதீஸ் குமார் நிலமேகம் களமிறக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், வாவாசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின், புதிய அரசியல் ஒத்துழைப்பின் அடிப்படையில் 11 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைவர் பி. புனிதன், தூய்மையான அரசியலை கடைப்பிடிக்குமாறு வேட்பாளர்களுக்கு அறிவுறுத்திய நிலையில், கெராக்கான் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திக்குமாறு கட்சித் தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், போட்டியிடாத டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தலைமையிலான பெஜுவாங் கட்சி, பெரிக்காத்தான் வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்கும் என்றும், பெர்சாத்து தனது வேட்பாளர்களை இன்று அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News