மலாக்கா மாநில அரசியலமைப்பில் 7 நியமன உறுப்பினர்களை அனுமதிக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில பகத்தான் ஹரப்பான் கூட்டணி மாநில ஆட்சியமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், மலாக்கா மாநில பகத்தான் ஹரப்பான் தலைவர் அட்லி ஜஹாரி, மலாக்கா மாநில பி.கே.ஆர் செயல் தலைவர் ஆடம் அட்லி அப்துல் ஹாலிம், மலாக்கா ஜசெக தலைவர் கூ போய் தியோங், மலாக்கா அமானா தலைவர் டத்தோ அஷ்ரஃப் முக்லிஸ் மிங்ஹாட் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் மாநிலத் தலைமை மற்றும் அனைத்து பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநில அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, பக்காத்தான் ஹராப்பானின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில அரசாங்கத்திலிருந்து விலகுவது ஒருமனதாக உறுதி செய்யப்பட்டது.
மேலும், மாநில சட்டமன்றத்தில் அரசாங்கம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்காத ஆட்சிக்குழு உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ, மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் பதவி, சலுகைகள் மற்றும் வசதிகளை தொடர்ந்து அனுபவிப்பது ஜனநாயகக் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது என்பதால், மாநில அரசாங்கத்திலிருந்து விலகும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பக்காத்தான் ஹராப்பான் தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.
மேலும், மலாக்கா மாநில பகத்தான் ஹரப்பான் சார்பில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், சுமூகமான நிர்வாக மாற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில், தங்களது பதவிகளில் இருந்து வரும் ஜூலை 31-ஆம் தேதி முதல் விலக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், மாநில அரசாங்கத்தில் பணியாற்றிய காலம் முழுவதும் வழங்கப்பட்ட நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பிற்காக மலாக்கா முதலமைச்சர், அரசாங்க அதிகாரிகளுக்கும் மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், தங்களுக்கான மக்கள் ஆணை நிறைவடையும் வரை மலாக்கா மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவதாக மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.








