நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசாங்கத்தை தேர்வு செய்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் வகையில் நடப்பில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று ஆராவ் எம்.பி. ஷாஹிதான் காசிம் இன்று நாடாளுமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், அப்பிரச்னையை கையாளவும் நடப்பு அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய ஷாஹிதான் காசிம் , புதிய அரசாங்கம் ஒன்று தேர்வு செய்யப்படுவது அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.
விலைவாசி உயர்வு விவகாரத்தில் மக்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை என்ற நிலையாகிவிட்டது. தங்கள் கண்முன் நடக்கும் விவகாரங்களை கையாளுவதில் அரசாங்க அதிகாரிகளும் சோர்ந்து விட்டனர்.
எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் ஒரு கட்சியில் இணைவதற்கும், ஓர் அரசாங்கத்தை தேர்வு செய்வதற்கும் நடப்பில் உள்ள கட்சி விட்டு கட்சித் தாவும் தடை சட்டத்தை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஷாஹிதான் காசிம் கேட்டுக்கொண்டார்.








