ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.10-
கெடா மாநில மஇகாவைத் தொடர்ந்து, பினாங்கு மஇகாவும் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேசிய முன்னணி, மஇகாவுடன் எந்தவொரு வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்வதில்லை; எல்லாப் பதவிகளையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள் என பினாங்கு மஇகா தலைவர் ஜே. தினகரன் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத் தொகுதிகள், அரசு நிறுவனப் பதவிகள் உட்பட எதுவும் தங்களுக்குக் கிடைப்பதில்லை என அவர் குறிப்பிட்டார்.
மஇகாவை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல என்றும், மஇகா இல்லாமல் 16ஆவது பொதுத் தேர்தலைச் சந்திப்பது தேசிய முன்னணிக்கு எளிதாக இருக்காது என்றும் தினகரன் கடும் எச்சரிக்கை விடுத்தார். பினாங்கு மஇகாவின் இந்தத் தீர்மானம் கட்சியின் தேசியத் தலைவர், மத்திய செயற்குழுவின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். கட்சியின் வளர்ச்சியையும் இந்தியர்களின் நலனையும் கருதி எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த மஇகா தயாராக உள்ளது என ஏற்கனவே அதன் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.