“பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான கூட்டரசு அரசாங்கத்துடன் இணைந்து ஜோகூர் மாநிலத்திலும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைந்தால், ஒரு சுபிட்சமான மற்றும் முன்னேற்றகரமான மாநிலத்தை உருவாக்க முடியும்,” என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பெக்கோக் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக போட்டியிடும் ஆசிரியர் டே யோக் ஜியுனை ஆதரித்து நேற்று கம்போங் பாரு சாஆவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாபாராய்டு உரையாற்றினார்.
அங்கு திரண்டிருந்த வாக்காளர்களின் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே பேசிய பாபாராய்டு, , “ஜசெக தேசியத் தலைவரும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோவிற்கு பிரதமர் முக்கியப் பொறுப்பு கொடுத்ததன் விளைவாக, கடந்த 20 ஆண்டுகளாகக் கொள்கலன்களில் இயங்கி வந்த பகாங், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 18 வகுப்பறைகளைக் கொண்ட நவீனப் பள்ளியைக் கட்டமைப்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்து, அப்பள்ளியை கட்டத் தொடங்கியுள்ளனர் ” எனக் குறிப்பிட்டார்.
மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் பெக்கோக் சட்டமன்றத் தொகுதி மக்கள் நன்மைகளைப் பெற, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டே யோக் ஜியுனை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாபாராய்டு தமது உரையில் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, பொதுச் செயலாளர் அந்தோணி லோக் உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.








