Jan 14, 2026
Thisaigal NewsYouTube
சவால்மிக்க அரசியல் சூழலில் நடைபெறும் அம்னோ பொதுப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணையும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள ஸாஹிட் வலியுறுத்து
அரசியல்

சவால்மிக்க அரசியல் சூழலில் நடைபெறும் அம்னோ பொதுப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணையும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள ஸாஹிட் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், ஜனவரி.14-

அம்னோ உறுப்பினர்கள் அனைவரும், சவால்மிக்க தற்போதைய அரசியல் சூழலில் நடைபெறும் கட்சியின் பொதுப்பேரவையைத் தங்களுக்குள் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இன்று தொடங்கவுள்ள அம்னோ பொதுப்பேரவையானது, கட்சியின் எதிர்காலத்தை, ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட வியூகத்தின் அடிப்படையில், கொண்டுச் செல்ல உதவும் என்றும் ஸாஹிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பொதுப்பேரவையில் நடைபெறவுள்ள அனைத்து விவாதங்களும், அங்கு எடுக்கப்படும் முக்கிய முடிவுகளும், கட்சிக்கு, நிச்சயமாக நன்மை பயக்கும் என்றும் ஸாஹிட் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் இன்று புதன்கிழமை தொடங்கி எதிர்வரும் சனிக்கிழமை வரை அம்னோ பொதுப்பேரவையானது நடைபெறவுள்ளது.

நாடு தழுவிய நிலையில், 191 அம்னோ பிரிவுகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் இந்த பொதுப்பேரவையில், சுமார் 6,412 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பொதுப்பேரவைக்கு முன்னதாக, அம்னோவின் 175 பிரிவுகளிடமிருந்து 662 தீர்மானங்கள் தலைமையகத்திற்குக் கிடைத்துள்ளன.

அவை, அடிமட்ட உறுப்பினர்களிடையே உள்ள பல்வேறு பிரச்சினைகளையும், முன்னுரிமைகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரஸாக்கிற்கு நீதி வழங்கி அவருக்கு அரச மன்னிப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானங்களே அதிகளவில் உள்ளதாக அம்னோ வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

அம்னோவின் இவ்வாண்டு பொதுப்பேரவையானது, மலேசிய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

வரும் 16-ஆவது பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வியூகங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News