Apr 19, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்ட ஊழல் வழக்கு விசாரணை /  ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நீதிமன்றம் காலக்கெடு
அரசியல்

பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்ட ஊழல் வழக்கு விசாரணை / ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நீதிமன்றம் காலக்கெடு

Share:

பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்டம் மற்றும் முக்கிய சாலைகள் அமைக்கும் திட்டம் தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மீதான ஊழல் குற்றச்சாட்டு, தற்போது விசாரணையில் உள்ள நிலையில், இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் அவை நிறைவு செய்யப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிஅசூரா ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற குறுக்கு விசாரணைக்குப் பிறகு, இவ்வழக்கில் 37-வது அரசு தரப்பு சாட்சியான தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜி ஞானராஜா, காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக விசாரணையை ஒத்திவைக்கக் கோரியதையடுத்து நீதிபதி அசூரா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இவ்வழக்கு நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருவதால், நீதிமன்றம் அதன் கட்டுப்பாட்டை எடுத்து வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக நீதிபதி அசூரா குறிப்பிட்டுள்ளார்.

அதன் படி, நேற்று அவ்வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்த அவர், அடுத்த விசாரணை தேதியில் மருத்துவ சான்றிதழ் அவசியம் என்றும், மறுவிசாரணையானது ஏப்ரல் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் மீண்டும் தொடங்கும் என்றும் உத்தரவிட்டார்.

நீதிபதி அசூராவின் உத்தரவை ஒப்புக் கொண்ட துணை அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹாருதீன் வான் லாடின், அரசு தரப்பும் விரைவான தீர்ப்பை எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக குறுக்கு விசாரணையின் போது, உடல்நிலை சரியில்லாத ஞானராஜா, எதிர்தரப்பு வழக்கறிஞரான டியாரா கத்ரீனா, தன்னிடம் ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதாகத் தெரிவித்தார்.

அக்கேள்விகளுக்கு தான் ஏற்கனவே வழக்கறிஞர் ராம்கர்பால் சிங்-யிடம் பதிலளித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, இவ்வழக்கு விசாரணையை நீதிமன்றம் தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும், சாட்சியத்தின் கட்டுப்பாட்டில் அது இருக்கக் கூடாது என்றும் ராம்கர்பால் சிங் நீதிபதி அசூரா விடம் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, நீதிபதி அசூரா இவ்வழக்கை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய முடிவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News