கோலாலம்பூரில் தொடங்கி நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூட்டரசுப் பிரதேச டிஏபி-யின் தலைவர் தன் கொக் வாய் இன் பரிந்துரை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் அம்னோவின் முன்னாள் தலைவர்கள் அமைப்பின் தலைவர் டத்தோ முஸ்தஃபா யாக்குப்.
தற்போது கூட்டரசு பிரதேச கோலாலம்பூர் இல் இருக்கும் ஆட்சிமுறைக் கட்டமைப்பு போதுமானதாக இருப்பதாக அவர் சொன்னார்.
கோலாலம்பூரை சீன உறுப்பினர்களால் நிறைந்திருக்கும் ஓர் ஊராட்சி மன்றமாக மாற்றும் டிஏபி-யின் எண்ணத்தைத் தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும், அக்கட்சியால் அதனை மிக ந்ளிதாகச் செய்திட முடியும் எனவும் முஸ்தஃபா யாக்குப் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் உள்ள எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேர்தலில் மக்கள் தேர்தெடுத்த நிகராளிகள் இருக்கின்றார்கள். டத்தோ பண்டாருக்கு உதவியாக எல்லா இனத்தையும் பிரதிநிதித்து மாவட்ட மன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். இன்னும் எதற்கு உள்ளாட்சித் தேர்தல் என முஸ்தஃபா யாக்குப் கேள்வி எழுப்பினார்.
கோலாம்பூருக்கு இந்த அனுமதி கொடுக்கப்பட்டால், பினாங்கு, ஈப்போ, கிள்ளான், ஜோகூர் பாரு போன்ற இதர ஊராட்சி மன்றங்களும் இதே போன்ற தேர்தலை நடத்த கோரிக்கை வைப்பார்கள்.
.அண்மைய காலமாக, டிஏபி கட்சியின் மூத்த தலைவரான டான்ஸ்ரீ லிம் கிட் சியாங் குரல் கொடுத்ததைப் போலவே, அக்கட்சியின் பழைய இனவாத சித்தாந்தத்தை வற்புறுத்தலுடன் கொண்டு வருவதாக, அவர் கூறினார்.
இதற்கிடையில், டிஏபியின் புதிய தலைமையால் கொக் வாய்யின் சிந்தனைப் போக்கைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே வெறுப்பும் இனவெறியும் தூண்டும் முயற்சிகள் இனி நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








