மலேசிய இந்தியர்களின் உருமாற்றுப் பிரிவான மித்தராவின் சிறப்புப்பணிக்குழுவிலிருந்து செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் மற்றும் ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸென் ராயர் நீக்கப்பட்டதற்கு பெரிய காரணங்கள் எதுவும் இல்லை என்று அந்த சிறப்புப்பணிக்குழுவின் தலைவர் டத்தோ ரா. ரமணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மித்ரா சிறப்புப்பணிக்குழுவை அறிவித்து, தம்மை அதன் தலைவராக நியமனம் செய்த பின்னர் அமைக்கப்பட்ட அக்குழுவில் டத்தோ சிவராஜ், ஆர்.எஸ்.என். ராயர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
இந்நிலையில் ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்தக்கூடிய கட்சிகளுக்கு ஒரு கட்சிக்கு ஒரு பிரதிநிதிதான் மித்ரா குழுவில் இடம் பெற்று இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அண்மையில் பிரதமரை தாம் சந்தித்த போது,அவர் இந்த விவரத்தை தெளிவுப்படுத்தியதையும் டத்தோ ரமணன் நினைவுகூர்ந்தார். தற்போது மித்ரா சிறப்புப்பணிக்குழுவில் மஇகாவின் பிரதிநிதியாக செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் விளக்கினார்.







