இந்தியா, ஜூன் 04-
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. மொத்தம் 543 தொகுதிகளில் முடிவுகள் வெளியிடப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி வரையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 294 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி 232 இடங்களிலும் மற்றக்கட்சிகள் 17 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி, மீண்டும் அரசாங்கத்தை அமைக்கவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் வேளையில் தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் புதுச்சேரியில் ஒரு இடத்திலும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், ஆட்ட நாயகனாகவும் கருதப்பட்ட அக்கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை 38,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் போட்டியிட்ட கோயம்புத்தூர் தொகுதியில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 2,10,049 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








