கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-
எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலில் மஇகா மற்றும் மசீச. இணைய விரும்பினால் தெளிவான, நேர்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்று அந்த கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான கெராக்கான் இன்று வலியுறுத்தியுள்ளது.
பாரிசான் நேஷனல் உறுப்புக் கட்சிகளான அவ்விரு கட்சிகளும் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகக் கூறி, பெரிக்காத்தான் நேஷனலை அணுகுவதாக இல்லாமல் அவை நேர்மையான நிலைப்பாட்டுடன் இணைய வேண்டும் என்று கெராக்கான் கட்சியின் பொதுச் செயலாளர் வோங் சியா ஸேன் தெரிவித்தார்.
தவிர, அரசியல் போராட்டங்கள் என்பது பருவ காலமாகவோ அல்லது பதவியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டதாகவோ இருக்கக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மஇகாவும், மசீச.வும் உண்மையில் மக்களிடம், குறிப்பாக இந்திய மற்றும் சீன சமூகங்களின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்க விரும்பினால், அவர்கள் பெரிக்காத்தான் நேஷனல் போராட்டத்தில் இணைவதைத் தாங்கள் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வரவேற்பும், அழைப்பும் வற்புறுத்தலின் அடிப்படையில் இல்லாமல், சுயமாக, தன்னார்வத்துடன், நேர்மையின் நிபந்தனையின் அடிப்படையில் இணைவதாக இருக்க வேண்டும் என்று வோங் சியா ஸேன் வலியுறுத்தினார்.