ஜோகூர் பாரு, ஜூலை.11-
ஜோகூர் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலையொட்டி, முக்கியத் தலைவர்கள் இன்று காலை வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
அதன்படி, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த ஜோகூர் மாநில ஜசெக தலைவர் மற்றும் துணைத் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங், காலை 9.20 மணியளவில் கூலாய் பெசாரில் உள்ள SJKC கூலாய் பெசார் வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.
மேலும், ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஓன் ஹாஃபி காஃஸி, காலை 8.30 மணியளவில் SK சிம்பாங் ரெங்காம் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் அங்கு வந்திருந்த வாக்காளர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர், சிம்பாங் ரெங்காம் பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாகவும் சீராகவும் நடைபெற்று வருவதாகக் கூறி, அனைத்து ஜோகூர் மக்களும் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அம்னோ துணைத் தலைவரும் தற்காப்பு அமைச்சருமான டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின், காலை 8.02 மணிக்கே, ஜோகூர் பாருவில் உள்ள SK தாமான் ரிந்திங் வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அதே வேளையில், அம்னோ மகளிர் பிரிவுத் தலைவரும் தோட்டப் பயிர்கள் மற்றும் வணிகப் பொருட்கள் துறை அமைச்சருமான நொராய்னி அஹ்மாட், காலை 8.50 மணியளவில் பத்து பஹாட்டில் உள்ள SMK டத்தோ ஓன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
இதற்கிடையில், பெரிக்காத்தான் நேஷனல் ஜோகூர் மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சாருடின் ஜமால், காலை 10 மணியளவில் SJKC லங்காட் வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
மேலும், முடா கட்சித் தலைவர் அமீரா அயிஷா அப்துல் அஸிஸ், காலை 8 மணியளவில் லார்கினில் உள்ள டேவான் கம்போங் மெலாயு மண்டப வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு புத்ரி வங்சா தொகுதியில் வெற்றி பெற்ற அவர், இம்முறை மாநிலத் தேர்தலில் போட்டியிடாமல், அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








