பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.12-
பெரிகாத்தான் நேஷனல் கூட்டணித் தலைவர் பதவிக்கு புதியவர் ஒருவரை தேர்வு செய்யும் நோக்கில், சிறப்புப் பொதுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற பாஸ் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் முன்மொழிவிற்கு டான் ஶ்ரீ முகைதீன் யாசின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டமானது மிக விரைவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள முகைதீன் யாசின், உச்ச மன்றத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்க, பெரிக்கான் துணைப் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசானை வலியுறுத்தியுள்ளார்.
அதே வேளையில், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள தனது பதவி விலகலையும் ஏற்றுக் கொள்ளும்படியும் முகைதீன் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டணியின் அரசியலமைப்பின் படி, புதிய தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் முகைதீன் யாசின் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இச்சிறப்புப் பொதுக் கூட்டம் குறித்து, கடந்த ஜனவரி 10-ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்று, உச்ச மன்றத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.








