பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.03-
திவெட் எனப்படும் தொழிற்பயிற்சி குறித்த விளக்கத்திற்காக டிஏபி கட்சியைச் சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்னோ தலைமையகத்திற்கு வருகை புரிந்து பார்வையிட்டிருந்தனர். இந்த விவகாரத்தை மசீச துணைத் தலைவர் மாஹ் ஹான் சூன் "ஆபாசமான" வார்த்தைகளால் இழிவாக விமர்சித்தார். அவ்வாறான விமர்சனத்திற்கு கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஸேமின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சு, பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசுக்குள் பிளவை ஏற்படுத்த முயல்வதாகவும், இது முழுக்க முழுக்க கொள்கை தொடர்பான விவாதம் என்றும் சோங் பதிலடி கொடுத்தார். அம்னோ தலைமையகம் என்பது துணைப் பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகங்களில் ஒன்று எனச் சுட்டிக் காட்டிய அவர், மசீச தலைவர்கள் இதே கட்டடத்திற்குச் சென்றபோது மாஹ் ஏன் வாய் திறக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.