கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக் கட்சியாக மஇகா இணைவது தொடர்பில் தீர்க்கமாக முடிவு செய்வதற்கு முன்னதாக அதன் தலைவர்கள், பாரிசான் நேஷனல் உயர் மட்டத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பாரிசான் நேஷனல் புத்ரி தலைவி நூருல் அமால் ஃபௌஸி கேட்டுக் கொண்டுள்ளார்.
தாங்கள் எந்த இலக்கை நோக்கி கட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று முடிவு எடுப்பதற்கு மஇகா தலைவர்களுக்கு முழு உரிமையுண்டு.
இருந்த போதிலும் அதற்கு முன்னதாக தற்போது மக்களின் பெரிய கவன ஈர்ப்பாக மாறியுள்ள மஇகாவின் எதிர்கால திட்டம் குறித்து தீர்க்கமாக முடிவு எடுப்பதற்கு அதன் முக்கியத் தலைவர்கள் பாரிசான் நேஷனல் உயர் மட்டத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கூட்டணியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஓர் உறுப்புக் கட்சி, அதிலிருந்து விலகுவது என்பது கடினமான முடிவு என்றாலும் முதலில் பேச்சு வார்த்தைக்கு இடம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.