சிரம்பான், ஆகஸ்ட்.04-
தங்கள் ஆட்சேப நடவடிக்கைக்கு பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சனிடெரி நெப்கினை ஒரு பொருளாக பயன்படுத்தியிருப்பது குறித்து நெகிரி செம்பிலான் மாநில ஜசெக மூத்த உறுப்பினர்கள் இயக்கத்தின் தலைவர் லீ கோங் ஹிங் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
இன்று சிரம்பானில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய லீ கோங் ஹிங், பெண்களை அவமதிக்கும் நோக்கில் தாங்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய செனட்டர் பதவி, வெளி மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தட்டிப் பறித்திருப்பதை ஆட்சேபிக்கும் நோக்கிலேயே சனிடெரி நெப்கின் பயன்படுத்தப்பட்ட தங்களின் இந்தப் போராட்டம் அமைந்ததாக அவர் விளக்கினார்.
எனினும் தங்களின் இந்தச் செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாக அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் சுகாதாரப் பொருளாகப் பயன்படுத்தப்படும் சனிடெரி நெப்கினை முகத்தில் கட்டிக் கொண்டு, மூத்த உறுப்பினர்கள் பொதுவில் காட்சிப்படுத்தியிருப்பது, பெண்களின் இயற்கை உபாதைக்கு உதவும் அப்பொருளை அவமதிக்கும் செயல் என்று தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங் இன்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.