இந்தியா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தின் பழைய நகரமான பிரயாக்ராஜ், 2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவிற்கு தற்போது களைகட்டியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வரும் இந்த மகாகும்பமேளாவிற்கு பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, அடுத்த பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவுபெறுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டில் 12 கோடி மக்கள் கூடிய வேளையில் இம்முறை 40 கோடி மக்கள் கூடுவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் கும்பமேளாவில் கலந்துக் கொள்ள உலகெங்கிலும் இருந்தும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
மலேசியாவிலிருந்து பலர் வெவ்வேறு குழுக்களாக மகா கும்பமேளாவிற்கு கலந்து கொள்ள புறப்பட்டுள்ளனர். நாட்டின் முன்னணி பயண நிறுவனங்களில் ஒன்றான KPS டிரவல்ஸ் நிறுவனம் இதுவரையில் 1,400 பேரை யாத்ரீக புனித பயணத்திற்கு அனுப்பியுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் கே.பி. சாமி தெரிவித்தார்.
வரும் ஜனவரி 26 ஆம் தேதி KPS சார்பில் 25 பேர் கொண்ட குழுவினர் KLIA விமான நிலையத்தின் மூலம் கும்பாமேளாவிற்கு புறப்படவிருக்கின்றனர். அந்த 25 யாத்ரீகர்களையும் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவரும், கொடை நெஞ்சருமான ஓம்ஸ் தியாகராஜன் விமான நிலையத்தில் வழியனுப்பி வைப்பார் என்று கே.பி. சாமி தெரிவித்துள்ளார்.







