Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மஇகா வரலாற்றில் தனித்துவமான இடம் பெற்ற டான் ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம்
சிறப்பு செய்திகள்

மஇகா வரலாற்றில் தனித்துவமான இடம் பெற்ற டான் ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம்

Share:

மஇகாவின் வரலாற்றில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்ற 6 ஆவது தேசியத் தலைவர் மறைந்த டான் ஸ்ரீ வெ. மாணிக்கவாசகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இன்று சிறப்பு நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.

கோலாலம்பூர், புக்கிட் டாமன்சாராவில் உள்ள ராயல் காமன்வெல்த் கிளப்பில், மஇகா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மேலவைத் தலைவர் டான் ஸ்ரீ ராயிஸ் யாத்திம் கலந்து சிறப்பித்தார்.

1973 முதல் 1979ஆம் ஆண்டு வரை மஇகா தேசியத் தலைவராக இருந்த டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் , இந்திய சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்ததுடன், நாட்டின் வளர்ச்சியிலும், பொது வாழ்விலும் முக்கியப் பங்காற்றினார் என்று ராய்ஸ் யாத்திம் புகழ்ந்துரைத்தார்.

கோலக்கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், போக்குவரத்து அமைச்சராகவும், ஆள்பல அமைச்சராகவும் பொறுப்பில் இருந்த டான் ஶ்ரீ மாணிக்கவாசகம், தொழிலாளர்கள் நலனில் அதிக கவனம் செலுத்திய முக்கியத் தலைவராவார் என்றார் ராயிஸ்.

மஇகாவின் கல்வி, தொழில் திறன், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு டான் ஸ்ரீ வெ. மாணிக்கவாசகத்தின் தூரநோக்கு சிந்தனை முக்கியக் காரணமாக இருந்ததாக டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது உரையில் தெரிவித்தார்.

தமது தந்தையின் வளர்ச்சியிலும் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் முக்கியப் பங்காற்றியதாகக் கூறிய அவர், அவரது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டிருப்பது பெருமைக்குரியது என்றார்.

டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் போன்ற உன்னத தலைவர்களின் தியாகங்களும் சாதனைகளும் வருங்காலத் தலைமுறைக்கு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

சொக்சோவைத் தோற்றுவித்ததுடன், மஇகா கல்வி நிதியை உருவாக்கியதிலும் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் முக்கியப் பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

டான் ஸ்ரீ வெ. மாணிக்கவாசகத்தின் புதல்வர் ரமணி, மஇகா தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, ஒரு முன்னாள் தலைவரின் நூற்றாண்டு நினைவைக் கொண்டாடிய நிகழ்வாக மட்டுமின்றி, அவர் விட்டுச் சென்ற பணிகளையும் சாதனைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வாகவும் அமைந்தது.

வரலாற்றில் இடம் பிடித்த ஒரு தலைவரின் பெயர் பொறிக்கப்பட்ட அந்தச் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்ட தருணத்தில், அவரது குடும்பத்தினரும், அவர் வழிநடத்திய கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றாக நின்றது, டான் ஸ்ரீ வெ. மாணிக்கவாசகத்தின் நீண்டகாலப் பயணத்துக்கு கிடைத்த மரியாதையாக அமைந்தது.

Related News