Nov 7, 2026
Thisaigal NewsYouTube

2027 புதிய கல்வித் திட்ட சர்ச்சை: கல்வித் துணை அமைச்சருடன் அவசரச் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2027 புதிய கல்வித் திட்ட சர்ச்சை: கல்வித் துணை அமைச்சருடன் அவசரச் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய முடிவு!

மலேசியாவின் 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வித் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து ஆராய்வதற்காக, கல்வித் துணை அமைச்சருடன் அவசரச் சிறப்புக் கூட்டமானது கடந்த நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய கல்வித் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பாடவேளை மாற்றங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் பாட நேரங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தாய்மொழிப் பாடங்களுக்கான நேரக் குறைப்பு: அதிருப்தி

வரும் 2027-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வித் திட்டத்தின் கீழ், தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழிப் பாடங்களுக்காக இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த வாராந்திர 12 பாடநேரங்கள் 10 ஆகக் குறைக்கப்படுவதாக முன்மொழியப்பட்டிருந்தது.

இதனுடன் தொடர்புடைய பிற மாற்றங்களும் சீன மற்றும் தமிழ்க் கல்வி சார்ந்த அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தின. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த சில வாரங்களாகப் பல்வேறு தரப்பினரும் தங்களது கவலைகளையும் கருத்துகளையும் முன்வைத்து வந்தனர்.

பல்வேறு கல்வி அமைப்புகள் பங்கேற்பு

இந்நிலையில், கல்வித் துணை அமைச்சரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம், மலேசியத் தமிழ்ப்பள்ளி அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பு, தமிழ் அறவாரியம், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை, மலேசியத் தமிழ்ப்பள்ளி வாரியக் கூட்டமைப்பு, தேசிய மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கம், இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு (ACE) மற்றும் மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2027 புதிய கல்வித் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள பாடவேளை அட்டவணை, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பாடங்கள் மற்றும் அவற்றுக்கான கற்பித்தல் நேரங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன.

பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்

இக்கூட்டத்தில் தாய்மொழிப் பாடங்களுக்குக் குறைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கற்றல்-கற்பித்தல் நேரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

மேலும், ஆங்கில மொழிப் பாடம், மனிதனும் சுற்றுச்சூழலும், மாணவர்களின் குணநலன் மற்றும் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தும் செயல்முறை கல்வி, Tasmik கல்வி உள்ளிட்ட பாடங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

சீன மற்றும் தமிழ்க் கல்வி இயக்கங்களுடனான சந்திப்புகளின் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய கல்வித் திட்டத்தில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனக் கல்வித் துணை அமைச்சர் உறுதியளித்தார். திருத்தப்பட்ட திட்டம் தயாரானதும் அடுத்த சில நாட்களுக்குள் மீண்டும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வாரத்திற்கு 12 கற்பித்தல் நேரங்கள் தொடரும்

இந்நிலையில், மலேசியக் கல்வி அமைச்சு (KPM) வெளியிட்ட ஊடக அறிக்கையில், தேசியப் பள்ளிகளில் (SK) மலாய் மொழிப் பாடத்திற்கும், சீனத் தேசிய வகைப் பள்ளிகளில் (SJKC) சீன மொழிப் பாடத்திற்கும், தமிழ்த் தேசிய வகைப் பள்ளிகளில் (SJKT) தமிழ்மொழிப் பாடத்திற்கும் வாரத்திற்கு 12 கற்பித்தல் நேரங்கள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் விரிவான ஆய்வுகள், கலந்துரையாடல்களின் முடிவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீண்டகாலத் தீர்வுகளின் அவசியம் வலியுறுத்தல்

தாய்மொழிக் கல்வியின் தரம், உரிமைகள் மற்றும் தொடர்ச்சியான நிலைத்தன்மை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரும் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

மேலும், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்க் கல்வி தொடர்பான முக்கிய முடிவுகள் அல்லது மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடும் அரசுசாரா கூட்டமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இறுதி நேரத்தில் மட்டுமே கருத்துகளைச் சேகரிக்கும் நடைமுறையைச் சீரமைத்து, தொடக்கத்திலிருந்தே தொடர்புடைய அமைப்புகளின் கருத்துகளைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

தற்போதைய சர்ச்சைகளுக்குத் தற்காலிகத் தீர்வுகளை மட்டும் நாடாமல், தாய்மொழிக் கல்வியின் எதிர்காலத்தையும் மாணவர்களின் கல்வி நலனையும் கருத்தில் கொண்டு நீண்டகால அடிப்படையிலான நிலையான தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கல்வி அமைச்சின் அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ்க் கல்வி கூட்டமைப்பு, இம்முடிவைச் செயல்படுத்துவதற்கான கற்பித்தல் நேர அட்டவணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்றும் எதிர்பார்த்துள்ளது என்ற தகவலை தமிழ்க் கல்வி கூட்டமைப்பைச் சேர்ந்த குமரன் மாரிமுத்து வழங்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

தீபாவளி திருநாளிலும் ஓய்வில்லா அழகுக் கலை நிபுணர்கள்: குடும்பத்தையும் தியாகம் செய்து வாடிக்கையாளர்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு

தீபாவளி திருநாளிலும் ஓய்வில்லா அழகுக் கலை நிபுணர்கள்: குடும்பத்தையும் தியாகம் செய்து வாடிக்கையாளர்களுக்காக உழைக்கும் அர்ப்பணிப்பு

அம்மாவின் அன்பை மதியுங்கள்; தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்புங்கள்!” – அன்வார் உருக்கமான வேண்டுகோள்

அம்மாவின் அன்பை மதியுங்கள்; தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்புங்கள்!” – அன்வார் உருக்கமான வேண்டுகோள்

தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்! - டத்தோ ஶ்ரீ ரமணன் வாழ்த்து

தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்! - டத்தோ ஶ்ரீ ரமணன் வாழ்த்து

இலக்கவியல் அமைச்சரின் தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தி 2026 

இலக்கவியல் அமைச்சரின் தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தி 2026