ஒளி, நம்பிக்கை, அன்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் ஏற்படுத்துவதோடு, நமது சமூகத்தின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தட்டும்.
தீபாவளி இன்று உலகெங்கிலும் கொண்டாடப்படும் ஒரு சிறப்புமிக்க திருநாளாகும். இருப்பினும், மலேசியாவில் தீபாவளி கொண்டாடப்படும் விதமும், நமது இந்திய சமூகம் தனது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் போற்றிப் பாதுகாத்து வரும் விதமும் தனித்துவமானவை.
உலகின் பல நாடுகளில் வாழும் இந்திய சமூகத்தினருடன் ஒப்பிடும்போது, மலேசிய இந்தியர்கள் தங்களது மொழி, சமயம், கலை, பண்பாடு மற்றும் பாரம்பரிய விழுமியங்களைத் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருவது பெருமைக்குரிய ஒன்றாகும். நமது ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், பாரம்பரியக் கலைகள், பண்டிகைகள் மற்றும் குடும்ப மரபுகள் இன்றும் உயிர்ப்புடன் விளங்குவது இதற்குச் சிறந்த சான்றாகும்.
மலேசியாவின் உண்மையான அழகே அதன் பல்லினப் பண்பாட்டில்தான் அடங்கியுள்ளது. பல்வேறு இனங்களும் தங்களது தனித்துவமான அடையாளங்களைப் பாதுகாத்தவாறே, ஒரே தேசத்தின் மக்களாக ஒற்றுமையுடன் வாழ்வது உலக அரங்கில் மலேசியாவிற்குத் தனிச் சிறப்பைத் தேடித் தந்துள்ளது. இந்தப் பன்முகத்தன்மையில் இந்திய சமூகத்தின் பண்பாடும் பாரம்பரியமும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
நமது முன்னோர்கள் பல தலைமுறைகளாகக் கட்டிக்காத்த இந்தப் பண்பாட்டுச் செல்வம் காலப்போக்கில் மறைந்துவிடாமல், எதிர்காலத் தலைமுறையினரிடமும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.
இந்திய சமூகத்தின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் முயற்சிகளில் நான் என்றும் துணை நின்று செயல்படுவேன். நமது மொழியும் பண்பாடும் வெறும் கடந்தகால நினைவுகளாக இல்லாமல், இன்றைய தலைமுறையின் பெருமையாகவும் நாளைய தலைமுறையின் அடையாளமாகவும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
அதோடு மாறிவரும் உலகின் வளர்ச்சிக்கு ஏற்ப நமது சமூகமும் முன்னேறுவது அவசியமாகும். குறிப்பாக, இலக்கவியல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் உலகின் பொருளாதாரம், கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் துறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மலேசிய இந்திய சமூகம் இலக்கவியல் பொருளாதாரத்தில் அதிக ஈடுபாட்டுடன் முன்னேறி வருவதைக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. குறிப்பாக, இந்திய இளைஞர்களும் தொழில்முனைவோரும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும், இலக்கவியல் துறையில் தங்களுக்கான புதிய பாதைகளை உருவாக்குவதும் எனக்கு மிகுந்த பெருமையளிக்கிறது.
அதிலும் குறிப்பாக, நமது தமிழ்ப்பள்ளிகள் இலக்கவியல் கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் முனைப்புடன் பங்கேற்று வருவது எனக்கு மனநிறைவை அளிக்கின்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே தொழில்நுட்பம் குறித்த ஆர்வம் அதிகரித்து வருவது வரவேற்கத்தக்க மாற்றமாகும். இந்த ஆர்வம் செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம் மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பத் துறைகளிலும் மேலும் வளர வேண்டும்.
வரும் ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளில் இலக்கவியல் கல்விக்கான வாய்ப்புகள் மேலும் விரிவடைந்து, அதிகமான மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதேபோன்று, இந்திய சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இலக்கவியல் பொருளாதாரத்தில் மேலும் சிறந்து விளங்கி, நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
இந்தத் தீபாவளி நமது இல்லங்களில் மட்டுமல்ல, உள்ளங்களிலும் ஒளியேற்றட்டும். அன்பும் ஒற்றுமையும் மேலோங்கட்டும். நமது பாரம்பரியமும் பெருமையும் நிலைத்திருக்கட்டும். மலேசியா தொடர்ந்து அமைதியும் வளமும் நிறைந்த நாடாகத் திகழட்டும்.
அனைவருக்கும் எனது இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!








