தீபாவளி திருநாளை முன்னிட்டு, கேமரன் மலையில் குறைந்த வருமானம் கொண்ட 150 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் ஹோ சி யாங், கேமரன் மலை மாவட்ட மன்ற உறுப்பினர் தேவின் காளியண்ணன் ஆகியோர் இணைந்து, “சஹாயா காசே தீபாவளி” என்ற நலத் திட்டத்தைத் தொடங்கி வைத்து இவ்வுதவிகளை வழங்கினர்.

மேலும், சமூக மற்றும் சமய நிகழ்ச்சிகளுக்காக 150 நாற்காலிகளும் நன்கொடையாக வழங்கப்பட்டன. அவற்றில் 50 நாற்காலிகள் உள்ளூர் சமூகப் பிரதிநிதிகளிடமும், 100 நாற்காலிகள் கோலத் தெர்லா ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திடமும் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையே, கேமரன் மலையிலுள்ள இரண்டு இந்து ஆலயங்களின் பராமரிப்புக்காக 3 இலட்சத்து 20 ஆயிரம் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தானா ராத்தா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 2 இலட்சத்து 20 ஆயிரம் வெள்ளியையும், பிரிஞ்சாங் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்திற்கு ஒரு இலட்சம் வெள்ளியையும் ஹோ சி யாங் வழங்கினார்.

அனைத்து இன மக்களின் சமய, கலாசார மற்றும் சமூக நலன்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து, ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிறைந்த சமூகத்தை உருவாக்கப் பாடுபடுவதாக ஹோ சி யாங் தெரிவித்தார்.








