ஈப்போ இந்தியக் கலை பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில், ஏழை மற்றும் வசதி குறைந்த இந்திய மாணவர்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி, ஈப்போ மைடின் பேரங்காடியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் மூலம் வசதி குறைந்த மாணவர்களும் மற்ற மாணவர்களைப் போல புத்தாடைகள் அணிந்து தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பி. பாலையா தெரிவித்தார்.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் சார்பில், அவரது சிறப்பு அதிகாரி உ. முத்துசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்களின் நலனிலும் அக்கறை கொண்டு டத்தோ அ. சிவநேசன் இத்தகைய சமூகநலத் திட்டங்களுக்கு ஆதரவும் மானியமும் வழங்கி வருவது பாராட்டுக்குரியது என பாலையா குறிப்பிட்டார்.

இதனிடையே, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பண்டிகைக் கால மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக உ. முத்துசாமி தெரிவித்தார்.
இம்முயற்சிக்கு ஆதரவளித்த மாநில அரசாங்கத்திற்கும் டத்தோ அ. சிவநேசனுக்கும் ஈப்போ இந்தியக் கலை பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் பாலையா நன்றியைத் தெரிவித்தார்.








