அரசாங்கத்திற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பும் தரப்பினருக்கு மத்தியில், செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதும், தகவல்களின் நம்பகத்தன்மையை ஆராய்வதும் ஊடகவியலாளர்களின் முக்கியப் பொறுப்பாகும். இத்தகைய பொறுப்புணர்வுடன் செயல்படும் ஊடகங்கள், சமூகத்திற்கு ஆற்றும் பணி மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ள சமூகப் பாதுகாப்பு நிறுவனமாக பெர்கேசோவின் தலைமையகத்தில், தமிழ் ஊடகவியலாளர்களுக்காக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ஏற்பாடு செய்திருந்த 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி மதிய விருந்து உபசரிப்பு நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மிக வேகமாகப் பரவும் வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில், உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்திகளை வழங்குவதும், மக்களுக்குச் சரியான தகவல்களைச் சென்றடையச் செய்வதும் ஊடகங்களின் முக்கியப் பொறுப்பாக விளங்குகிறது.
குறிப்பாக, அரசாங்கத்தின் செயல்பாடுகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நாட்டின் முக்கிய விவகாரங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, உண்மைத்தன்மைக்கும் செய்தி அறநெறிக்கும் முன்னுரிமை அளிப்பவர்கள் ஊடகவியலாளர்கள். அவர்கள்தான், இன்று செய்திகளுக்கு உயர் நாடியாக விளங்கி வருகின்றனர்.
அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சன ரீதியாக அணுகுவதும், பொதுமக்களின் கேள்விகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதும் ஊடகங்களின் ஜனநாயகப் பொறுப்பின் ஒரு பகுதியாகும். அந்த வகையில் இந்நாட்டில் உள்ள ஊடகங்கள் ஆற்றி வரும் பங்களிப்பை தாம் மனம் திறந்து பாராட்டுவதாக டத்தோ ஸ்ரீ ரமணன் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் ஊடகத்துறையினருடன் தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மனித வள அமைச்சின் கீழ் செயல்படும் மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர், சமூக பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோவின் குழும தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ஶ்ரீ டாக்டர் முஹமட் அஸ்மான் பின் டத்தோ அஸிஸ் முஹமட், மலேசிய ஊடகவியலாளர் கிளப்பின் தலைவர் டத்தோ அஹிருடின் அதான் @ ரோக்கி புரூ, ஸ்கோப் ஊடகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஸைனுல் அரிஃபின், திசைகள் நிர்வாக இயக்குநர் ஜி.கே. பசுபதி, மக்கள் ஓசை நிர்வாக இயக்குநர் டத்தோ கோபாலகிருஷ்ணன், மலேசிய தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக, தீபாவளி திருநாளையொட்டி, திசைகள் வெளியிட்டுள்ள 56 வண்ணப் பக்கங்களை உள்ளடக்கிய திசைகளின் தீபாவளி சிறப்பு மலரை அதன் நிர்வாக இயக்குநர் ஜி.கே. பசுபதி, அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணனிடம் வழங்கினார்.
ஊடகங்களின் ஆசிரியர்கள், செய்தியாளர்கள் என சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்வில் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன், தீபாவளி அன்பளிப்பை வழங்கி சிறப்பு செய்தார்.








