தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் ஏற்பாட்டில், வசதி குறைந்த இந்தியக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி தாமான் ஸ்ரீ வாங் மண்டபத்தில் நடைபெற்றது.
நேற்று மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மொத்தம் 36,000 ரிங்கிட் செலவில் 360 உணவுப் பொருள் கூடைகள் சுங்கைப்பட்டாணி வட்டாரத்தைச் சேர்ந்த இந்தியக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் முகமட் தௌஃபிக் ஜொஹாரி சிறப்பு வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
அவருடன் பாகார் அராங் சட்டமன்ற உறுப்பினர் ஆடம் லோ வெய் சாய், சிடாம் சட்டமன்ற உறுப்பினர் பாவ் வோங் பாவ் எக் மற்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன் ஆகியோரும் கலந்து கொண்டு சுங்கைப்பட்டாணி இந்திய மக்களுக்கு உணவுப் பொருள் கூடைகளை வழங்கினர்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்தகைய உதவித் திட்டங்கள், பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிப்பதுடன், அவர்களும் மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் பண்டிகையைக் கொண்டாட வழிவகுக்கும் என்று டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்தார்.

இன, மத வேறுபாடுகளைக் கடந்து, சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அக்கறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.








