நாட்டின் முன்னணி தமிழ் ஊடகங்களில் ஒன்றான திசைகள், செய்தித்துறைக்கு அப்பாற்பட்ட நிலையில் தனது சமூகக் கடப்பாட்டின் ஒரு பகுதியாக, கிளப் மீடியா திசைகள் மூலம் முன்னணி வர்த்தக நிறுவனமான கே.கே. மார்ட் எனப்படும் KK Supermart & Superstore Sdn. Bhd.-உடன் இணைந்து, கிள்ளானில் உள்ள இரண்டு கருணை இல்லங்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியது.

தீபாவளி திருநாளை முன்னிட்டு, கிள்ளானில் உள்ள Pertubuhan Kebajikan Waja Home Malaysia மற்றும் Pertubuhan Kebajikan Kanak- Kanak Selangor ஆகிய இரு கருணை இல்லங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் அரிசி, சீனி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
KK Supermart & Superstore Sdn. Bhd. நிறுவனத்தின் தொடர்புத்துறை நிர்வாகி புவான் சித்தி ஸாஹிடா முஹமட் ஸாஹாரியும், கிளப் மீடியா திசைகள் சார்பில் திசைகளின் நிர்வாக இயக்குநர் ஜி.கே. பசுபதியும் இணைந்து, இரண்டு கருணை இல்லங்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

தீபாவளியையொட்டி, தங்கள் கருணை இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக கே.கே. மார்ட்டும், கிளப் மீடியா திசைகளும் இணைந்து தங்கள் இல்லத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதற்கு நன்றி தெரிவித்த Pertubuhan Kebajikan Waja Home Malaysia காப்பாளர் புவனேஸ்வரன் கோபால், இந்த உதவியானது இந்த ஆண்டு மட்டுமல்லாமல், தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தீபாவளி நாட்களில் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தீபாவளி போன்ற விழாக்காலங்களில் இவ்வாறு வழங்கப்படும் உதவிகள் தங்களின் சிரமத்தைக் குறைக்க வல்லது என்பதுடன், இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடப் பெரிதும் உதவும் என்று கிள்ளான் உத்தமாவில் உள்ள Pertubuhan Kebajikan Kanak- Kanak Selangor கருணை இல்லத்தின் காப்பாளர் விக்னேஸ்வரி சொக்கலிங்கம் குறிப்பிட்டார்.

கிளப் மீடியா திசைகளுடன் இணைந்து தீபாவளியையொட்டி இரண்டு சமூக இல்லங்களுக்கு உதவுவதில் பெருமிதம் தெரிவித்த KK Supermart & Superstore Sdn. Bhd. நிறுவனத்தின் நிறுவனத் தொடர்புத்துறை நிர்வாகி புவான் சித்தி ஸாஹிடா ஸாஹாரி, இதுபோன்று உதவி தேவைப்படக்கூடியவர்களுக்கு உதவுவதில் தங்கள் நிறுவனம் எப்போதுமே சமூகக் கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்றார்.

கிளப் மீடியா திசைகள் ஏற்பாட்டில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி, கோத்தா கெமுனிங் சமூக மண்டபத்தில் மூன்று கருணை இல்லங்களைச் சேர்ந்த சுமார் 100 குழந்தைகளுக்கு விருந்து உபசரிப்புடன், தீபாவளி புத்தாடைகள், பள்ளிப் புத்தகப் பைகள் போன்ற அடிப்படைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கிளப் மீடியா திசைகளின் மற்றொரு முன்னெடுப்பாக, தீபாவளியை முன்னிட்டு தற்போது கே.கே. KK மார்ட் வர்த்தக நிறுவனத்துடன் இணைந்து இரண்டு கருணை இல்லங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் கிளப் மீடியா திசைகள் மகிழ்ச்சி கொள்வதாக திசைகளின் நிர்வாக இயக்குநர் ஜி.கே. பசுபதி தெரிவித்தார். அத்துடன், தங்களுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியுள்ள கே.கே. மார்ட் பொறுப்பாளர்களுக்கும், கே.கே. மார்ட் தோற்றுநர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாய் கீ கான் அவர்களுக்கும் இவ்வேளையில் கிளப் மீடியா திசைகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஜி.கே. பசுபதி குறிப்பிட்டார்.

இந்த முன்னெடுப்பின் மூலம், தீபாவளி மகிழ்ச்சியைத் தேவையுடைய குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதுடன், சமூக நலனில் ஊடகங்களும் வர்த்தக நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் திசைகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.








