Oct 26, 2026
Thisaigal NewsYouTube

கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி உபசரிப்பு: 3 கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு அன்பளிப்புகள்

நாட்டின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான திசைகளின் ஆதரவுடன், கிளப் மேடியா திசைகள் ஏற்பாட்டில் தீபாவளித் திருநாளையொட்டி, மூன்று கருணை இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிய ‘அன்பு ஒளி 2026’ தீபாவளி விருந்து உபசரிப்பு நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம், கோத்தா கெமுனிங் சமூக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, குழந்தைகளுக்குப் புத்தாடைகள், பள்ளிப் புத்தகப் பைகள், இனிப்பு பலகாரங்கள் உள்ளிட்ட அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மூன்று கருணை இல்லங்களைச் சேர்ந்த 100 குழந்தைகள் தீபாவளி அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்டனர். PERTUBUHAN KEBAJIKAN KANAK-KANAK ISTIMEWA KLANG SELANGOR, PERTUBUHAN KEBAJIKAN KANAK-KANAK SELANGOR, PERTUBUHAN KEBAJIKAN WAJAHOME MALAYSIA ஆகியவை அந்த மூன்று கருணை இல்லங்களாகும்.

கிளப் மேடியா திசைகள் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வு, திசைகளின் நிர்வாக இயக்குநர் ஜி.கே பசுபதி மற்றும் கண்மணி ஆகியோரின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

விருந்து உபசரிப்பு, ஆடல், பாடல், சிலம்பாட்டம், சிறார்களை மகிழ்விக்கும் மாயாஜால நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்ற கிளப் மேடியா திசைகளின் ‘அன்பு ஒளி 2026’ நிகழ்வுக்குக் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமை தாங்கினார்.

நிகழ்வில், இந்தியச் சமூகத்தின் உருமாற்றத்திற்கான பிரிவான மித்ராவின் தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர், கிள்ளான் ரோட்டரி கிளப்பின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ரவிராஜ், ஷா ஆலாம் நகராண்மைக் கழக உறுப்பினர் யோகேஸ்வரி சாமிநாதன், வழக்கறிஞர் பராம், சுங்கை பூலோ சிறைச்சாலை அதிகாரி பி. விஷ்ணு, சிலம்பக் கழக மகாகுரு ஆர். தாமோதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

திசைகளின் கெடா, பினாங்கு மாநில நிருபர் ஹேமா எம்.எஸ். மணியத்தின் விறுவிறுப்பான அறிவிப்புடன் நிகழ்வு தொடங்கியது.

நிகழ்வுக்குத் தலைமை தாங்கி சிறப்புரையாற்றிய கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், ஒற்றுமையால் மட்டுமே இந்தியச் சமூகத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்று வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் ஒருவரையொருவர் குறை கூறுவதையும் தாழ்த்திப் பேசுவதையும் கைவிட்டு, சமூகத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தீபாவளியை ‘Deepavali’ என்றா அல்லது ‘Diwali’ என்றா அழைப்பது என்பது குறித்த சர்ச்சைகள் அதிகமாகப் பேசப்படும் நிலையில், சமூகத்துக்கு நன்மை பயக்கும் செயல்கள் போதிய கவனம் பெறுவதில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். தீபாவளியில் நல்லவற்றை எடுத்துக் கொண்டு, தீயவற்றைக் கைவிட வேண்டும் என்றும் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தினார்.

இந்தியச் சமூகம் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால், பரஸ்பர மோதல்களைக் கைவிட்டு ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்றும் அவர் தமது உரையில் வலியுறுத்தினார்.

அதேவேளையில், கிளப் மேடியா திசைகள் தனது முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், கருணை இல்லக் குழந்தைகளை முன்னிறுத்தி இத்தகைய சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்து, அவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி மகிழ்வித்ததற்காக, திசைகளின் நிர்வாக இயக்குநர் ஜி. கே பசுபதி மற்றும் கண்மணி ஆகியோருக்குப் பிரகாஷ் சம்புநாதன் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், கருணை இல்லக் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய எந்தவோர் உதவியையும் வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பிரகாஷ் சம்புநாதனுக்குத் திசைகளின் நிர்வாக இயக்குநர் ஜி.கே பசுபதி நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.

நிகழ்வில் தலைமையுரையாற்றிய திசைகள் ஆசிரியர் இ.எம். சாமி, பத்திரிகைத் துறையில் தமக்குள்ள நீண்டகால அனுபவத்தைக் குறிப்பிட்டு, தமிழ் ஊடகத் துறையில் திசைகளை முன்னணி ஊடகமாகக் கொண்டு வருவதுடன், திசைகள் வெளியிடும் மாதாந்திர சஞ்சிகையையும் நாட்டில் முன்னுதாரணமான வெளியீடாகப் பரிணமிக்கச் செய்வதே தங்களின் நோக்கம் என்று தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பனிக்கூழ் வழங்கப்பட்டது. பிரதான மேடையில், வருகை தந்திருந்த பிரமுகர்கள் கிளப் மேடியா திசைகள் சார்பில் கருணை இல்லக் குழந்தைகளுக்குத் தீபாவளிப் புத்தாடைகள், பள்ளிப் புத்தகப் பைகள் உள்ளிட்ட அன்பளிப்புகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட பெரியவர்களுக்கு வாசனைத் திரவியங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய ஷா ஆலாம் நகராண்மைக் கழக உறுப்பினர் யோகேஸ்வரி சாமிநாதன், வாசனைத் திரவியங்களை அன்பளிப்பாக வழங்கிய மூடா கட்சியின் உதவித் தலைவர் டாக்டர் சிவபிரகாஷ், பெண்களுக்கான புத்தாடைகளை வழங்கிய டிஸெட் பிளஸ் சைஸ் கலாக்‌ஷென் நிறுவனத்தின் தெய்வானை முனியாண்டி, பலகாரங்களை வழங்கி உபசரித்த நிஜா டிலைட்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் நிஜா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிகழ்வில் பாடல்களை வழங்கிய பாடகர் டி லேக்ஸ் அவெனியூ மலேசியா திலா லக்‌ஷ்மண் - கோல்ட் ராஜ், பரதநாட்டியம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை வழங்கிய ஏஷா ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஷாமலா ஜெயபாலன், பள்ளிப் புத்தகப் பைகளை அன்பளிப்பாக வழங்கிய கேகே சூப்பர் மார்ட், சிலம்பாட்டத்தை காட்சிப்படுத்திய Persatuan Kesenian Adithada Silambam Malaysia அமைப்பின் மகாகுரு தாமோதரன் ராமசந்திரன், மாயாஜால நிகழ்ச்சியை வழங்கிய அகிலன், குழந்தைகளுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்கிய சினாரான் ஶ்ரீ ஸாஹாரி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் சுரேஷ் கிருஷ்ணன், உபசரிப்பை வழங்கிய கேபிஆர் கேட்டரிங் நிறுவனத்தின் கண்ணுசாமி, சாய் வானிஸ் (எம்) செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் பார்வதி ஆகியோருக்கும் கிளப் மேடியா திசைகள் ஏற்பாட்டுக் குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →
ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!

ஈப்போ லிட்டில் இந்தியாவில் களைகட்டும் தீபாவளிச் சந்தை: 86 கடைகள்; வாகன நிறுத்தத்துக்கு சிறப்பு ஏற்பாடு!

மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

கோத்தா கெமுனிங்கில் 6 இந்திய சிறு வியாபாரிகளுக்கு  வணிகச் சாதனங்கள் – 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் உதவி

கோத்தா கெமுனிங்கில் 6 இந்திய சிறு வியாபாரிகளுக்கு வணிகச் சாதனங்கள் – 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் உதவி

மலேசிய இந்தியர்களின் வலிகளையும் பங்களிப்புகளையும் ஆவணப்படுத்தும் 500 பக்க நூல் வெளியீடு

மலேசிய இந்தியர்களின் வலிகளையும் பங்களிப்புகளையும் ஆவணப்படுத்தும் 500 பக்க நூல் வெளியீடு

திருக்குறளை நவீன தொழில்நுட்பத்துடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் – டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு

திருக்குறளை நவீன தொழில்நுட்பத்துடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் – டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு

இனமானம், மொழிமானம், தன்மானம் இல்லாத மனிதன் சுயமானம் இழந்தவனாகிறான்!

இனமானம், மொழிமானம், தன்மானம் இல்லாத மனிதன் சுயமானம் இழந்தவனாகிறான்!