மலேசிய இந்தியர்களின் வரலாறு, அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகள், காலங்காலமாக எதிர்கொண்ட துயரங்கள் மற்றும் இன்றைய சமூகச் சவால்களை ஆவணப்படுத்தும் வகையில், ஆய்வாளர் ஜானகி ராமன் மாணிக்கம் எழுதிய 500 பக்க ஆங்கில நூலான மலேசியன் இந்தியன் இம்பேக்ட் அண்ட் பேயின் கோலாலம்பூர் ஒய்எம்சிஏ மண்டபத்தில் நேற்று வெளியீடு கண்டது.

மலேசிய இந்தியச் சமூகத்தின் வரலாறு, பிரச்சினைகள், அவலங்கள் குறித்து ஆய்வு செய்து நூல்களை எழுதி வரும் ஜானகி ராமனின் இந்தப் புதிய படைப்பு, இந்தியர்களின் பங்களிப்புகளையும் அவர்கள் எதிர்கொண்ட வலிகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது.

முன்னாள் இடைநிலைப்பள்ளி ஆசிரிர் தைப்பிங், கார்த்திகேசு லெட்சுமணனால் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த நூல், வெளியீட்டு விழாவிற்கு தேசிய நிலை நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் தலைமையேற்று நூலை, அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

ஒரு சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டு, இந்தியர்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள நூலாசிரியர் ஜானகி ராமனை, டத்தோ சகாதேவன் தமது உரையில் வெகுவாக பாராட்டினார்.

அதேவேளையில் கடந்த கால அவலங்களுக்கும், பிரச்னைகளுக்கும் யார் காரணம் என்பதை ஆராய்வதை விட நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இந்தியச் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, இந்தியச் சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து, அடுத்தகட்ட நகர்வுகளுக்கான திட்டங்களை வகுத்துச் செயல்பட முன்வர வேண்டும் என்று டத்தோ சகாதேவன் தமது உரையில் வலியுறுத்தினார்.

இந்த நூலை எழுதுவதற்கான நோக்கம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து திசைகளுடன் பகிர்ந்து கொண்ட ஜானகி ராமன், மலேசியாவுக்கு நமது மூதாதையர்கள் வந்த காலத்திலிருந்து, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் இந்தியர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். கடுமையாக உழைத்து, பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு அவர்கள் அளித்த பங்களிப்புகளையும் அனுபவித்த வலிகளையும் ஒரே ஆவணமாகத் தொகுத்து வழங்குவதே இந்த நூலின் நோக்கம் என்று விவரித்தார்.

மகப்பேறு நிபுணர் டாக்டர் அசோகன் நூலாய்வு செய்தார். மை ஸ்கில் அறவாரியத்தின் தலைவர் வழக்கறிஞர் பசுபதி மற்றும் டாக்டர் சண்முக சிவா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தேசிய தோட்டத் தொழிற்சங்கத்தின் சிலாங்கூர் மாநில செயலாளர் த.மா. சேகரன் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.








