திருக்குறளின் சிறப்பையும், அதன் வாழ்வியல் மற்றும் தத்துவக் கருத்துகளையும் நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு வலியுறுத்தினார்.
திருக்குறள் அனைவரிடமும் பரவலாகக் கொண்டு செல்லப்பட வேண்டிய சிறந்த வாழ்வியல் வழிகாட்டி என்றும், அதனை மக்களிடம் மேலும் கொண்டு சேர்க்க செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருக்குறளும் மகாகவி பாரதியாரின் சிந்தனைகளும் நமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புடையவை என்றும், பைபிள், பகவத் கீதை, குர்ஆன் ஆகியவற்றைப் போலவே திருக்குறளும் மனித வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் நெறிகளையும் தத்துவக் கருத்துகளையும் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு கொம்தார் ஆடிட்டோரியம் F அரங்கில் மலேசிய தமிழர் சங்கம் ஏற்பாடு செய்த ‘செயற்கை நுண்ணறிவில் திருக்குறள்’ அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டு டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு இதனைத் தெரிவித்தார்.
திருக்குறளை செயற்கை நுண்ணறிவான நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிவகைகளை ஆராய்ந்து அதற்கான முன்னடுப்புகளையும், முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ சுந்தராஜு வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மலேசிய தமிழர் சங்க தேசியத் தலைவர் மா. பரமசிவம், திட்ட இயக்குநர் டாக்டர் சங்கர் வர்மா, மலாயா பல்கலைக்கழக திருக்குறள் இருக்கைத் தலைவர் பேராசிரியர் செல்ல பெருமாள், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் டத்தோ அருள் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








