Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சன்வே லாகூனில் மீண்டும் அச்சுறுத்தும் ‘நைட் ஓஃப் ஃபிரைட் 12’
சிறப்பு செய்திகள்

சன்வே லாகூனில் மீண்டும் அச்சுறுத்தும் ‘நைட் ஓஃப் ஃபிரைட் 12’

Share:

ஹல்லோவின் சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் பிரபலமான திகில் நிகழ்ச்சியான ‘நைட் ஓஃப் ஃபிரைட்’, தனது 12-வது பதிப்பாக சன்வே லாகூனில் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.

கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, பல்வேறு திகில் வீடுகள், தனித்துவமான கதைக்களங்கள், சிறப்பு ஒளி மற்றும் ஒலி விளைவுகள், அச்சுறுத்தும் கதாபாத்திரங்களின் நேரடி நடிப்புகள் ஆகியவற்றுடன் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் ஸோம்பீஸ், வெம்பையர், முதாட்ன்ஸ் மற்றும் கில்லர் கிளவுன்ஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை அச்சுறுத்தி வந்தன.

இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு ‘நைட் ஓஃப் ஃபிரைட் 12: ஏப்-ஒகாலிப்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மனிதர்களை வேட்டையாடும் சேய்ன்சாவ் ஏந்திய குரங்குகள் ஆதிக்கம் செலுத்தும் எதிர்கால உலகை மையமாகக் கொண்டு இந்த ஆண்டின் முக்கிய கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

தெ சடன் இம்பாக்! எண்டர்டெய்ன்மெண்ட் கம்பனி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலகளாவிய படைப்பாக்க இயக்குநரும், நைட் ஓஃப் ஃபிரைட் நிகழ்ச்சியின் படைப்பாக்க இயக்குநருமான லியிண்டொன் வி. ஹாரிஸ், இந்த ஆண்டு கருப்பொருள் ‘பிளனெட் ஓஃப் ஏப்ஸ்’ மற்றும் ‘ மேட் மெக்ஸ்’ திரைப்படத் தொடர்களில் இருந்து உத்வேகம் பெற்றதாக தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு நிகழ்ச்சியில் பல்வேறு திகில் மற்றும் பிரபல கலாசார வகைகள், மாறுபட்ட காட்சியமைப்புகள் மற்றும் பல்வேறு கலாசார தாக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சன்வே தீம் பார்க்ஸ் நிறுவனத்தின் வணிக மற்றும் சந்தைப்படுத்தல் மேம்பாட்டுப் பொது மேலாளர் மிச்சேல் சூங், ‘ஏப்-ஒகாலிப்ஸ்’ கருப்பொருள் இந்த ஆண்டின் நிகழ்ச்சிக்கு புதிய படைப்பாக்க திசையை வழங்குவதாக தெரிவித்தார்.

மலேசியா மற்றும் ஆசியாவின் கதைக்களங்களுக்கும் இந்த ஆண்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகள், திகில் கதைகள், மாற்றியமைக்கப்பட்ட தேவதைக் கதைகள், மாங்கா மற்றும் கே-பாப் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட திகில் அனுபவங்கள் பல்வேறு திகில் வீடுகளில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு மொத்தம் 9 முக்கிய திகில் அனுபவங்கள் இடம் பெறுகின்றன. அவற்றில் முக்கியமான ‘ஏப்-ஒகாலிப்ஸ்: தெ கிங்டம் கோங்’ பகுதியில், செயின்சாவ் ஏந்திய மனித அளவிலான குரங்குகள் நிறைந்த உலகிற்குள் பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

‘பொந்தியானாக் vs போச்சோங்’ பகுதியில் மலேசிய திகில் கதைக்களம் இடம்பெறுகிறது. பேய் அரங்கில் திரையிடப்படும் குறும்படத்தை மையமாகக் கொண்ட இந்த அனுபவத்தில் பார்வையாளர்கள் எதிர்பாராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளலாம்.

‘யோகாய் ரோட்’ பகுதியில் ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் இடம்பெறும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவிகள் மற்றும் மர்மமான நிகழ்வுகளை பார்வையாளர்கள் எதிர்கொள்ளலாம். இதில் காப்பா மற்றும் தெங்கூ உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.

‘ஃபிரீசர்: ஃபிரஷ் மீட்’ மனித இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையைப் போன்ற இருண்ட மற்றும் அச்சமூட்டும் சூழலை உருவாக்குகிறது. அதேவேளை, ‘லிட்டல் ஷாப் ஓஃப் ஹோர்ரர்ஸ்’ பகுதியில் மாமிசம் உண்ணும் தாவரத்தை மையமாகக் கொண்ட பிரபலமான திகில்-நகைச்சுவை கதைக்களம், மாங்கா பாணியிலான யுவி 3D அனுபவமாக வழங்கப்படுகிறது.

‘ஹோர்ரர்வூட்: வேக்ஸ் மியூசியம் ஓஃப் மொன்ஸ்டர்ஸ்’ பகுதியில் ஹாலிவுட் திகில் திரைப்படங்களில் இடம்பெறும் பிரபலமான கொலைகார கதாபாத்திரங்களை நேரில் சந்திப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். இதில் ‘தெர்ரிஃபியர்’ திரைப்படங்களில் வரும் ஆர்ட் தெ கிளவுன் மற்றும் ‘ஸ்கிரிம்’ திரைப்படத் தொடரின் கோஸ்ட்ஃபேஸ் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

‘தெ நாட் சோ வண்டர்ஃபுல் விஸர்ட் ஓஃப் ஓஸ்’ பகுதியில் பிரபலமான ‘விஸர்ட் ஓஃப் ஓஸ்’ கதை இருண்ட திகில் வடிவில் மாற்றப்பட்டுள்ளது. ‘ரிடர்ன் டு சைலண்ட் ஹில்’ பகுதி, வீடியோ விளையாட்டுத் தொடரால் ஈர்க்கப்பட்ட உளவியல் மற்றும் உயிர் பிழைப்பு திகில் அனுபவத்தை வழங்குகிறது.

இதனுடன், ‘ரோமியோ மற்றும் ஜூலியட்: பொறாமை, வெறி, கொலை’ பகுதியில் பிரபலமான காதல் கதையான ரோமியோ அண்ட் ஜூலியட், இருண்ட மற்றும் திகில் நிறைந்த வடிவில், கே-பாப் தாக்கத்துடன் காட்சிப்படுத்தப்படுகிறது.

9 முக்கிய திகில் பகுதிகளுக்கு மேலாக, நிகழ்ச்சி நடைபெறும் சன்வே லாகூன் பூங்கா முழுவதும் பார்வையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் கதாபாத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் இடம்பெறும் 3 அச்சுறுத்தல் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சன்வே லாகூன் பூங்காவின் 11 தேர்ந்தெடுக்கப்பட்ட சவாரிகள், நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களில் திகில் கருப்பொருளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இரவு நேர பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக, முக்கிய மேடையில் நேரடி கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

12-வது ஆண்டாக நடைபெறும் நைட் ஓஃப் ஃபிரைட் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பார்வையாளர்களுக்கு நேரடியாக அந்தச் சூழலுக்குள் இருப்பது போன்ற ஆழமான அனுபவத்தை வழங்குவதாகவே தொடர்கிறது என மிச்சேல் சூங் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 25 முதல் நவம்பர் 7 வரை ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்நிகழ்ச்சியானது நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுச்சீட்டு மற்றும் முன்பதிவு தொடர்பான தகவல்களை குளுக் மற்றும் சன்வே லாகூனின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெறலாம்.

Related News