சுயமானம், இனமானம், மொழிமானம் ஆகியவை கலந்திடாத மனிதன் சுயமானத்தை இழந்தவனாகிவிடுகிறான் என்று மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தேசியத் தலைவரும் எழுத்தாண்மை ஏந்தலுமான முனைவர் பெரு.அ. தமிழ்மணி குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 148-வது அகவை நாள் விழாவில் பேருரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நூற்றுக்கும் அதிகமான பெரியார் தொண்டர்கள் பங்கேற்ற இவ்விழாவில், மதிக தேசியத் தலைவர் சா.பாரதி, மனிதநேய திராவிடக் கழகத் தலைவர் நாகபஞ்சு, பெரியார் பாசறைத் தலைவர் மு.மணிமாறன், கருஞ்சட்டைப் படை நிறுவனர் நாகேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தொடர்ந்து உரையாற்றிய முனைவர் பெரு.அ. தமிழ்மணி, “சுயமானம் இல்லாத சமயமும், பிடிமானமில்லாத இறை ஈடுபாடும், வழிபாட்டில் இல்லாத மொழியுரிமையும், பண்பாட்டில் நிலைக்காத தனித்துவ அடையாளமும் எவர் பாட்டிற்கும் இயங்கிட அனுமதியோம்” என்ற பெரியாரின் தன்மானப் பெருஞ்சுடர் கருத்தை எடுத்துரைத்தார்.

பெரியாரால் தட்டியெழுப்பப்பட்ட திராவிட இயக்கங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் உலகெங்கும் அரணாக இருப்பதுபோலவே, மலேசியாவிலும் செயல்பட்டு வருகின்றன என்றும் முனைவர் பெரு.அ. தமிழ்மணி குறிப்பிட்டார்.

இயக்கத் துணைத் தலைவர் தன்மானப் பெருஞ்சுடர் த.பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவை இயக்கத் தலைமைச் செயலாளர் சி.மு. விந்தைக்குமரன் வழிநடத்தினார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டத்தோ டாக்டர் ஞான.பாஸ்கரன் மருத்துவப் பயன்பாடு குறித்து விளக்கமளித்தார்.

இயக்கத் துணைச் செயலாளர் பெ.கோவிந்தசாமியின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.








