Oct 23, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய உள்ளூர் எழுத்தாளர்களுக்கு RM30,000 சிறப்புப் பரிசு: டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பு

மலேசிய உள்ளூர் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் டான் ஸ்ரீ கே.ஆர். சோமா, மொழி இலக்கிய அறவாரியம், சிறந்த 3 நூல்களுக்கு தலா 10,000 ரிங்கிட் வீதம் மொத்தம் 30,000 ரிங்கிட் சிறப்பு ரொக்கப் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் அறிவித்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த டான் ஸ்ரீ கே.ஆர். சோமா அனைத்துலக புத்தகப் போட்டிக்கு உலகளவில் போதிய ஆதரவு கிடைக்காததால், அந்த நிதி ஒதுக்கீட்டை முழுமையாக உள்ளூர் படைப்பாளர்களின் நூல்களுக்கு வெகுமதியாக வழங்க டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் இம்முடிவை எடுத்துள்ளது என்று டத்தோ சகாதேவன் குறிப்பிட்டார்.

நேற்று வியாழக்கிழமை கோலாலம்பூரில் உள்ள டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற்ற தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா, மொழி இலக்கிய அறவாரியத்தின் 34 ஆவது இலக்கியப் பரிசுப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ சகாதேவேன் இதனை அறிவித்தார்.

அடுத்த ஆண்டான 2027 முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிறப்பு விருதுத் திட்டம் தனியாக நடத்தப்படும். கடந்த மூன்று ஆண்டுகளில் உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட மிகச் சிறந்த உயர்தர வரலாறு, ஆராய்ச்சி, பொது நூல்கள் மற்றும் நாவல்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த 3 நூல்களின் ஆசிரியர்களுக்கு தலா 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும், வழக்கமாக நடைபெறும் வருடாந்திர இலக்கிய பரிசுப் போட்டிகள் எந்தவொரு தடையுமின்றி வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும் என்றும் டத்தோ சகாதேவன் விளக்கினார்.

உலகளாவிய நிலையில் தமிழ்ப்படைப்பாளர்களின் சிறந்த நூலுக்கு வெகுமதி வழங்கும் டான் ஸ்ரீ கே.ஆர். சோமா அனைத்துலகப் புத்தகப் போட்டித் திட்டம் முற்றாக நிராகரிக்கப்படவில்லை என்றாலும் அத்தகைய படைப்புகள் அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் அதனை பரிசீலிக்கவும் அறவாரியம் தயாராக இருப்பதாக டத்தோ பா. சகாதேவன் தெரிவித்தார்.

முன்னதாக டான் ஸ்ரீ கே.ஆர். சோமா, மொழி இலக்கிய அறவாரியத்தின் 34 ஆவது இலக்கியப் பரிசுப் போட்டியின் வெற்றி பெற்றவர்களுக்கு டத்தோ சகாதேவன் ரொக்கப் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

அதன்படி சிறுகதை, மரபுக்கவிதை, கட்டுரை, புதுக்கவிதை என்ற நிலையில் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட இலக்கியப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் அறுவர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

சிறுகதை பிரிவில் பேரா, தெலுக் இந்தானை சேர்ந்த கவிதா ராமசாமியும், மரபுக் கவிதை பிரிவில் பினாங்கு, சுங்கை ஜாவியை சேர்ந்த கவிஞர் சுப்பிரமணியம் பெருமாளும், கட்டுரைப் பிரிவில் சிலாங்கூர், ஷா ஆலாமைச் சேர்ந்த சிவம் தமிழ்செல்வமும், புதுக்கவிதைப் பிரிவில் பேரா, மெங்களம்புவைச் சேர்ந்த வெள்ளசாமி சுப்பிரமணியமும் முதல் பரிசைப் பெற்றனர். அவர்களுக்கு தலா 2,500 ரிங்கிட் ரொக்கம் வழங்கப்பட்டது.

இதர வெற்றியாளர்களுக்கு முறையே தலா 1,750 ரிங்கிட், 1,250 ரிங்கிட், மற்றும் இதர முன்று வெற்றியாளர்களுக்கு தலா 500 ரிங்கிட் வழங்கப்பட்டது.

டான் ஸ்ரீ கே.ஆர். சோமா, மொழி இலக்கிய அறவாரியத்தின் உறுப்பினர்களான டான் ஸ்ரீ டாக்டர் த. மாரிமுத்து, டத்தோ ஸ்ரீ A. தெய்வீகன், த.ம. சேகரன், பேராசிரியர் கிருஷ்ணன் மணியம், ஓவியர் லேனா, சைவமணி பெருமாள் உட்பட வெற்றிப் பெற்றவர்கள், போட்டியில் பங்கேற்றவர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டு நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →