கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், அத்தொகுதியைச் சேர்ந்த ஆறு இந்தியச் சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் வணிகத்திற்குத் தேவையான சாதனங்களை வழங்கினார்.

இன்று திங்கட்கிழமை, கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி மக்கள் சேவை மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டுவின் அலுவலகம் செயல்படுத்தும் ஐ-சீட் திட்டத்தின் மூலம் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன. ஜெனரேட்டர், சமையல் அடுப்பு, அச்சுப்பொறி உள்ளிட்ட சாதனங்கள் பயனாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஐ- சீட் திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் எம். மாதவனும் கலந்து கொண்டார்.

தனித்து வாழும் பெண்களும், தாய்மார்களும் சுயமாகத் தொழில் செய்து வருமானத்தைப் பெருக்கி, குடும்ப வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு இந்த உதவி, ஊக்கமளிக்கும் என்று பிரகாஷ் சம்புநாதன் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்பிலான சாதனங்கள் வழங்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இந்த உதவிக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரகாஷ் சம்புநாதன் உறுதிக் கூறினார்.
சிறிய அளவில் தொழில் செய்து வரும் வியாபாரிகள், தங்களின் தேவைக்கேற்ற சாதனங்கள் கிடைப்பது தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பாக அமைகிறது என்று திசைகளிடம் விவரித்தனர்.

தங்களின் சிறிய வர்த்தகத்தை பெருக்கிக் கொள்வதற்கு தொகுதியில் உள்ள இந்திய வியாபாரிகளுக்கு தொடர்ந்து உதவி வரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் மற்றும் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் உதவி பெற்றவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.








