பல்லின மக்கள் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதே பினாங்கு மாநிலத்தின் மிகப்பெரிய பலம் என மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகை இன, சமய வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றிணைப்பதுடன், பரஸ்பர மரியாதையையும் சமூக நல்லுறவையும் வலுப்படுத்தும் சிறந்த வாய்ப்பாக அமைகிறது என்றார்.

லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற லெபு பாசார் கிராம சமூக நிர்வாகக் கழகத்தின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர், லிட்டில் இந்தியா பினாங்கின் கலாசார அடையாளமாகவும், சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் பகுதியாகவும் திகழ்கிறது எனக் குறிப்பிட்டார்.

மேலும், லிட்டில் இந்தியாவின் பாரம்பரியத்தைப் பாதுகாத்துத் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுலாத் தலமாக மேம்படுத்த மாநில அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்தார்.

ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதே பினாங்கின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.









