தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கெடா, பாடாங் செராயில் உள்ள எகோன்சேஃப் பேரங்காடி, பி40 பிரிவைச் சேர்ந்த 30 இந்தியக் குடும்பங்களுக்கு தலா 100 ரிங்கிட் மதிப்புள்ள வவுச்சர் அன்பளிப்பை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது.

இந்நிகழ்ச்சியில், வட மாநில எகோன்சேஃப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸம்ஸுரி பின் மன்சோர், குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 100 ரிங்கிட் வவுச்சரை வழங்கினார்.

தீபாவளி என்பது மகிழ்ச்சி, ஒற்றுமை, சகோதரத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளும் திருநாள் என்றும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களுடன் பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஸம்ஸுரி மன்சோர் தெரிவித்தார்.

பாடாங் செராய் எகோன்சேஃப் பேரங்காடி திறக்கப்பட்டு ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில், தீபாவளியை முன்னிட்டு முதன்முறையாக இத்தகைய சமூகநல நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் ஸம்ஸுரி குறிப்பிட்டார்.
பி40 குடும்பங்களுக்காக வழங்கப்பட்ட 100 ரிங்கிட் வவுச்சர் அன்பளிப்பைக் கொண்டு, சம்பந்தப்பட்ட குடும்பங்கள் பாடாங் செராய் எகோன்சேஃப் பேரங்காடியிலேயே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று பாடாங் செராய் எகோன்சேஃப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கவிகுமார் குறிப்பிட்டார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாடாங் செராய் எகோன்சேஃப் சார்பில் கவிகுமார் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இத்திருநாள் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.

இதனிடைய 100 ரிங்கிட் வவுச்சரை பெற்றுக் கொண்ட B40 குடும்பத்தினர், தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டதுடன், இது சிறு தொகை என்றாலும் தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டனர்.

இத்தகைய சமூகநல உதவிகள் அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன என்று வர்ணிக்கப்பட்டது.








