பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில், துணைப் பிரதமரும், அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தலைமையில் இன்று நடைபெற்ற தீபாவளி நிகழ்வில், மக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

அத்தொகுதியைச் சேர்ந்த இந்திய பி40 குடும்பங்களுக்கு தீபாவளி அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

பாகான் டத்தோவில் உள்ள அம்னோ மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஸாஹிட் ஹாமிடியின் சிறப்பு அதிகாரி அர்வின் அப்பளசாமி கலந்து கொண்டு இந்த அன்பளிப்புகளை வழங்கினார்.

சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்விற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஸாஹிட், தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளையில் இம்முறை வழக்கத்தைவிடப் பெரிய அளவில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அதிகாரி அர்வின் அப்பளசாமி, துணைப் பிரதமர் தலைமையில் ஒற்றுமை தீபாவளி கொண்டாட்டமானது தொகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அத்தொகுதியைச் சேர்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும், இந்த ஏற்பாட்டினை செய்த ஸாஹிட் ஹாமிடிக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.








