மலேசியப் பெண்களின் தொழில்முனைவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், கேட்பரி (Cadbury) நிறுவனம் மைகாசே அறக்கட்டளையுடன் இணைந்து முன்னெடுத்து வரும் திட்டத்தின் கீழ், பேக்கிங் தொழிலில் சாதித்த பெண்கள் மற்ற பெண்களுக்கு வழிகாட்டிகளாக உருவெடுத்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள பிபிஆர் ராயா பெர்மாய் பகுதியில் நடைபெற்ற சிறப்புப் பயிலரங்கில், 20 பெண்களுக்கு பேக்கிங் பயிற்சி வழங்கப்பட்டது.
இதில், ஏற்கெனவே வீட்டிலிருந்தே பேக்கிங் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் சரஸ்வதி பெரியசாமி மற்றும் நூர் ஷார்ஸி பஷார் ஆகியோர் தங்களது அனுபவங்களையும் திறமைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

கேட்பரி சாக்லேட்டை அடிப்படையாகக் கொண்டு குக்கீஸ் மற்றும் பிரவுனீஸ் உள்ளிட்ட மூன்று வகையான உணவுகளைத் தயாரிப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கூட்டுத் திட்டத்தின் மூலம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பேக்கிங் பயிற்சியும் தொழில் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், தொண்டு நோக்கிலான முயற்சியில் அதிக எண்ணிக்கையிலான கேட்பரி சாக்லேட் குக்கீஸ்களைத் தயாரித்து மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பெண்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என கேட்பரி நிறுவனம் தெரிவித்துள்ளது.








