Nov 6, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்! - டத்தோ ஶ்ரீ ரமணன் வாழ்த்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி ஒளியில் மலரட்டும் ஒற்றுமை; உயரட்டும் சமூகத்தின் முன்னேற்றம்! - டத்தோ ஶ்ரீ ரமணன் வாழ்த்து

ஒளியின் திருநாளாம் தீபாவளியைக் கொண்டாடும் மலேசிய வாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தீமை மீது நன்மையும், இருள் மீது ஒளியும் வெற்றி பெறுவதைப் பறைசாற்றும் தீபாவளித் திருநாள், நமது வாழ்வில் புதிய நம்பிக்கை, நேர்மறைச் சிந்தனை மற்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் உன்னதமான நன்னாளாகும். 

பல்லின, பல்மத, பலமொழி சமூகங்கள் ஒன்றிணைந்து வாழும் மலேசியாவின் உண்மையான பலம் ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தில்தான் அடங்கியுள்ளது. இந்தத் தீபாவளித் திருநாளில், இன, மத வேறுபாடுகளைக் கடந்து, அன்பு, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவோம். 

மனிதவள அமைச்சின் (கெசுமா) வாயிலாக, ஒவ்வொரு மலேசியருக்கும் சமமான வேலை வாய்ப்புகள், திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. 

அதேவேளையில், மலேசிய இந்தியச் சமூகத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றம், கல்வி மேம்பாடு மற்றும் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதில் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. 

இந்த முயற்சிகளின் பலன்கள் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடைவதுடன், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். 

சம வாய்ப்புகள், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் அனைவருக்குமான முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வளமான மலேசியாவை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். 

இந்தத் தீபாவளித் திருநாள் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். புதிய நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஒற்றுமை நிறைந்த, வளமான எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்போம். 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 

அன்புடன், 

டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் 

மனிதவள அமைச்சர் 

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் 

கெஅடிலான் தேசிய உதவித் தலைவர் 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சிறப்பு செய்திகள் →