தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தாயன்பின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

உள்ளடக்கப் படைப்பாளர் தேவராஜ் டேவிட்டுடன் இணைந்து உருவாக்கிய அந்தக் காணொளியில், தீபாவளிக்கு ஊர் திரும்புமாறு தாயார் தொடர்ந்து அழைப்பதாகவும், திருமணம் செய்ய வற்புறுத்துவதாகவும் தேவராஜ் நகைச்சுவையாகப் புகார் தெரிவிக்கிறார்.
அதற்குப் பதிலளித்த அன்வார், தாயின் அன்பை உணர்ந்து மதிக்க வேண்டும் என உருக்கமாக அறிவுறுத்தினார்.

“உங்களிடம் இன்னும் தாய் இருக்கிறார். அவரை அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள். எனக்கு இப்போது தாய் இல்லை. தீபாவளியன்று வீட்டிற்குச் சென்று தாயைக் கட்டியணைத்து, முத்தமிட்டு உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். நல்ல பிள்ளையாக இருங்கள்,” என அவர் கூறினார்.

அன்வாரின் இந்த உருக்கமான அறிவுரையை ஏற்றுக் கொண்ட தேவராஜ், தீபாவளிக்கு வீடு திரும்பி தாயிடம் அன்பைப் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்தார்.

தாயன்பின் அருமையை நினைவூட்டும் இந்தச் சந்திப்பு, தீபாவளியின் உண்மையான மகிழ்ச்சி குடும்பத்தினருடன் இணைந்திருப்பதில்தான் உள்ளது என்பதை உணர்த்துகிறது.








