ஈப்போ, நவம்பர்.02-
தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் கா வோ தலைமையில் அவுலோங் சட்டமன்ற உறுப்பினர் தே கோக் லிம் மற்றும் பொகோக் அசாம் சட்டமன்ற உறுப்பினர் ஒங் செங் குவான் ஆகியோர் இணைந்து தைப்பிங் அரேனா சுக்கான் அவுலோங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை வெகுச் சிறப்பாக நடத்தினர்.

தைப்பிங் வட்டாரத்தில் உள்ள மக்கள் குறிப்பாக இந்தியர்கள் அதிகளவில் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு நிகழ்விற்கு சிறப்பு சேர்ந்தனர். தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினரும், துணைக் கல்வி அமைச்சருமான வோங் கா வோவுடன் இணைந்து இரு சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்தியர்களின் பாரம்பரியக் கலையான கோலாட்டத்துடன் வோங் கா வோ உட்பட பிரமுகர்கள் அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர். நாட்டின் தேசிய கீதமான நெகாரா கூ பாடலுடன் தீபாவளி உபரிசரிப்பு தொடங்கியது. தேசிய பண் பாடப்பட்ட போது தலைவர்கள் அனைவரும் எழுந்து மரியாதை செலுத்தினர். பாடல் இசை, நடனம் மற்றும் அறுசுவை உணவு வகைகள் வருகையாளர்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்தது.

தொகுதியில் தாங்கள் ஆற்றிய பணிகள் குறித்து அவுலோங் சட்டமன்ற உறுப்பினர் தே கோக் லிம் மற்றும் பொகோக் அசாம் சட்டமன்ற உறுப்பினர் ஒங் செங் குவான் ஆகியோர் தங்கள் உரையில் விளக்கினர்.
நிகழ்விற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் உரையாற்றிய தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினரும் துணைக் கல்வி அமைச்சருமான வோங் கா வோ, 2022 ஆம் ஆண்டு முதல் தீபாவளி உபசரிப்பைத் தொடர்ந்து நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்த முறை தைப்பிங்கில் உள்ள அதிகமான மக்கள் குறிப்பாக இந்தியர்கள் பெரும் அளவில் தீபாவளி பொது உபசரிப்பில் கலந்து கொண்டது, பெரும் பேறாக தாம் கருதும் அதே வேளையில் இந்த நாட்டை வளர்ப்பதில் நமது சமத்துவத்தைக் காட்டும் நேரம் மற்றும் இடம் இதுதான் என்றார் வோங் கா வோ.

தமது தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழ்ப்பள்ளிகளுக்கும், இந்து ஆலயங்களுக்கும் தொடர்ந்து மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் வோங் கா வோ சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக லாருட் மாதாங் மாவட்டத்தின் கீழ் உள்ள 10 தமிழ்ப்பள்ளிகளுக்கு பாராமரிப்புப் பணிகளுக்காக கல்வி அமைச்சின் மூலம் 5 லட்சத்து 95 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டு இருப்பதாக வோங் கா வோ குறிப்பிட்டார்.
தீபாவளி பொது உபசரிப்பு சிறப்பாக நடைபெறுவதற்கு திருவாளர் ரிஷி மற்றும் தமது குழுவினர் எடுத்துக் கொண்ட சிரத்தையும் வோங் கா வோ வெகுவாகப் பாராட்டினார்.








