ஜார்ஜ்டவுன், அக்டோபர்.19-
நாளை கொண்டாடப்பட இருக்கும் தீபாவளியை முன்னிட்டு, உதவிகள் தேவைப்படும் மக்களின் சுமையைக் குறைக்கும் உன்னத நோக்குடன், 'Yayasan Kita Anak Malaysia' அறவாரியம் பினாங்கு ஜூரு ஆட்டோ சிட்டி மண்டபத்தில் மாபெரும் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. பி40 பிரிவைச் சேர்ந்த மலாய், சீனம், இந்திய இனத்தவர் என சுமார் 700 குடும்பத்தினர் பினாங்கு முதல்வர் சோ கோன் யோவிடம் இருந்து இந்த உதவிப் பொருட்களைப் பெற்றுப் பயனடைந்தனர். இதில் மாநிலச் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூ சோமுவும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சோவ், அரசு சாரா இயக்கங்களின் இத்தகைய முன்னெடுப்புகளை மனதாரப் பாராட்டினார். அரசாங்கத்தின் உதவிகள் முழுமையாகச் சென்றடையாத மக்களிடம் கூட, பாலமாகச் செயல்படும் அமைப்புகள் வழியாக உதவி சென்று சேர்வதை இந்த நிகழ்ச்சி தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவும், இஃது ஒரு சிறந்த மக்கள் நலக் கருவி என்றும் அவர் குறிப்பிட்டார். தீபாவளி மட்டுமன்றி, மற்ற நாட்களிலும் மக்களுக்காக உழைக்கும் 'Yayasan Kita Anak Malaysia' அறவாரியத்திற்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதுடன், தீபாவளி வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் நோக்கம் குறித்துப் பேசிய அறவாரியத்தின் தலைவர் புவனீதன் ஹேலன் கோவன், இந்த ஆண்டு சுமார் 1,000 பேருக்கு உதவி வழங்கத் திட்டமிட்டதாகவும், மீதமுள்ள 300 பேருக்கு 'ஜெலாஜா காசிஹ்' திட்டத்தின் கீழ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வீடு வீடாகச் சென்று அன்பளிப்புகளை வழங்குவோம் என்றும் அறிவித்தார்.
தினசரிச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த அன்பளிப்புகள் மக்களின் சுமையைக் குறைக்கும் என நம்புவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.