Jan 26, 2026
Thisaigal NewsYouTube
நிழலாய் நின்ற பெற்றோர் மறைவு... கண்ணீரில் தவித்த மாணவன்: கைகொடுத்துக் காத்த அமைச்சர் ஸ்டீவன் சிம்
சிறப்பு செய்திகள்

நிழலாய் நின்ற பெற்றோர் மறைவு... கண்ணீரில் தவித்த மாணவன்: கைகொடுத்துக் காத்த அமைச்சர் ஸ்டீவன் சிம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.26-

வாழ்க்கையின் சவால்களை 15 வயதிலேயே எதிர்கொள்ளத் தொடங்கி, இன்று கல்வியைத் தொடரப் போராடும் ஒரு இளைஞனின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார் தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ ஸ்டீவன் சிம்.

யார் இந்த செல்வெஸ்டன்? (Selveston)

சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்று வரும் 25 வயது இளைஞர் செல்வெஸ்டனின் கதை கண்ணீரும் தன்னம்பிக்கையும் கலந்தது. வறுமையான குடும்பச் சூழல் காரணமாக, தனது 15 வயதிலேயே ஒரு செக்யூரிட்டி கார்டாக வேலைக்குச் சேர்ந்தார். தனது படிப்புச் செலவுக்காகவும், பெற்றோரைத் தாங்குவதற்காகவும் ஓயாமல் உழைத்த அந்த இளைஞனின் வாழ்வில் கடந்த ஆண்டு பேரிடியாக அமைந்தது.

சில மாத இடைவெளியில், கல்லீரல் பாதிப்பால் தந்தையையும், புற்றுநோயால் தாயையும் இழந்து திக்கற்ற நிலையில் நின்றார் செல்வெஸ்டன். உறவுகளின் இழப்பு ஒருபுறம், நிதி நெருக்கடி மறுபுறம் எனச் சூழப்பட்ட நிலையிலும், தனது லட்சியத்தை அவர் கைவிடவில்லை. பல்கலைக்கழகப் பட்டப் பிடிப்பிற்காக பகுதி நேரமாக கிராப் (Grab) ஓட்டி தனது வாழ்வாதாரத்தைக் கவனித்து வந்தார்.

சோதனையும் மனிதாபிமானமும்

விதியின் விளையாட்டாக, அண்மையில் கிராப் வேலையின் போது ஒரு Hit and Run விபத்தில் சிக்கி செல்வெஸ்டன் காலில் பலத்த காயமடைந்தார். வருமானம் நின்று போனது, கல்விக் கட்டணம் நிலுவையில் நின்றது. "எப்படியாவது தனது பட்டப்படிப்பை முடித்துவிட வேண்டும்" என்ற ஒற்றைக் கோரிக்கையோடு உதவியை எதிர்நோக்கி இருந்த அந்த இளைஞனின் வீட்டிற்கே நேரில் சென்றார் அமைச்சர் ஸ்டீவன் சிம்.

அமைச்சரின் நெகிழ்ச்சியான உதவி

செல்வெஸ்டனின் போராட்டத்தைக் கேட்டு நெகிழ்ந்த அமைச்சர், உடனடித் தேவைகளுக்காக 5,000 ரிங்கிட் ரொக்கத்தை வழங்கினார். அதுமட்டுமின்றி, அந்த இளைஞனின் ஒட்டுமொத்தப் படிப்புச் செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக சுமார் 20,000 வெள்ளி மதிப்பிலான பொறுப்புகளைத் தானே ஏற்பதாக உறுதி அளித்தார்.

"நீ தனியாகப் போராட வேண்டியதில்லை, உனது கல்வியில் மட்டும் கவனம் செலுத்து, உன்னைக் கரை சேர்க்க நான் இருக்கிறேன்" எனத் தந்தை உள்ளத்தோடு அமைச்சர் வழங்கிய ஆறுதல், அந்த இளைஞனுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

பதவிகளைத் தாண்டி, ஒரு சக மனிதனின் வலியை உணர்ந்து செயல்பட்ட அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. செல்வெஸ்டன் போன்ற உழைப்பாளிகள் துவண்டுவிடக் கூடாது என்பதில் காட்டிய இந்த அக்கறை, உண்மையான மக்கள் சேவைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம், இனம் மற்றும் மதங்களைக் கடந்து தனது தொகுதி மக்களின் துயர் துடைப்பதில் எப்போதும் தனித்துவம் மிக்கவராகத் திகழ்கிறார்.

கடந்த காலங்களில் வீடற்ற நிலையில் தவித்த ஒரு மலாய்க்கார இளைஞருக்குத் தனது மேலான முயற்சியால் வீடு கட்டிக் கொடுத்து உதவியது அவரது மனிதாபிமானத்திற்குச் சான்றாகும். ஒரு மக்கள் பிரதிநிதி எவ்வாறு இனம் கடந்து மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்கு ஸ்டீவன் சிம் அவர்களின் இந்தச் செயல்கள் ஒரு உன்னத முன்னுதாரணமாகும். இவரைப் போன்ற மக்கள் தொண்டர்களை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டால், வறுமையின் பிடியால் எந்தவொரு மாணவனின் கல்விக் கனவும் சிதையாது என்பது உறுதி.

Related News